அரசியல் அனுபவமில்லாதவர் கமல்ஹாசன்: தமிழிசை மீண்டும் தாக்கு

0 6

சென்னை, மே 16: அரசியல் அனுபவமில்லாத கமல்ஹாசனை, சட்டை கலையாமல் மக்கள் அவரை அப்புறப்படுத்துவார்கள் என்று தமிழிசை கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. அப்போது அரங்கேறிய வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜ சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக பாஜ தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜவினர் வாயில் கருப்புத்துணி கட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பேரணியின் போது திட்டமிட்டே மம்தா பானர்ஜி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார். தான் ஆளும் மாநிலத்தில் அமித்ஷா புகழ் வளர்ந்துவிடுமோ என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் மனது புண்படும்படி கமல்ஹாசன் பேசியுள்ளார். இப்போது, ‘’யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும்’’, என்று கூறியுள்ளார். ஆறிக்கொண்டு இருக்கும் காயத்தை மீண்டும் ரணப்படுத்தி பிரிவினைவாதத்தை தூண்டும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கியுள்ளார். இதற்காக அவரது சட்டை கலையாமல் மக்கள் அவரை அப்புறப்படுத்துவார்கள். அரசியல் அனுபவமில்லாதவர் கமல்ஹாசன். சலசலப்பு ஏற்படுத்துவதற்காகவே அவர் இப்படி பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.