4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்? சேம.நாராயணன் வேண்டுகோள்

0 8

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாளர்) சங்க தலைவரும், முன்னாள் வாரிய தலைவருமான சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. தமிழக மக்களின் உரிமைகளை எல்லாம் விட்டுக்கொடுத்து அடிமை ஆட்சி நடத்தும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் அமைய வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் தமக்கு எதிராக வாக்களித்து விட்டனர் என்பதால் தான் இப்பொழுது மேலும் 3 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்கும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமைய வேண்டும். திமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி, மெட்ரோ ரயில் திட்டம், தமிழகம் முழுவதிலும் எண்ணற்ற பாலங்கள், சாலை வசதிகள், மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இப்போதும் திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு மக்கள் நலம் சார்ந்த எண்ணற்ற திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்தால் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழக மக்களின் நலனை பாதுகாப்பார். தமிழகத்தில் நல்லாட்சி அமையவும், மத்தியில் அதிகாரங்களை கேட்டுப் பெறும் ஆட்சியாக திமுக ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.