மோடியை விட அமிதாப் ‘பெட்டர்’ : பிரியங்கா காந்தி விளாசல்

0 3

மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்ததால் பல்வேறு கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். உத்திரப் பிரதேச மாநிலம், மிர்சாபூரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இதில், அவர் பேசியதாவது: உலகத்திலேயே சிறந்த நடிகராக விளங்கும் மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்தீர்கள், அவர் உங்களுக்கு எதுவும் செய்யவில்லை, அதற்கு நீங்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை பிரதமராக்கி இருக்கலாம், மோடியை விட அமிதாப்  சிறந்தவர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பாஜ தலைவர்கள் ஒருவராவது வங்கிகளின் முன்போ, ஏடிஎம் மையங்களின் முன்போ வரிசையில் நின்றதை யாராவது பார்த்தீர்களா? கால்நடைகள் வளர்ப்பில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். தங்களை நாட்டின் காவலர்கள் என்று சொல்லி வரும் பாஜ.வினர் விவசாயிகளுக்கு உதவுவார்களா?, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தது பாஜ. அவர்களின் ஆட்சியில் நாடு முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடி, விவசாயிகளின் பிரச்னைகளை  காது கொடுத்து கேட்க 5 நிமிடம் கூட ஒதுக்கவில்லை. கடந்த 5 வருட ஆட்சியில் உலகின் பல்வேறு இடங்களுக்கு அவர் சென்றுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்டுள்ள சொந்த நாட்டு விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. பாகிஸ்தானை தாக்கி பேசுவது மட்டுமே பிரதமர் மோடியை பொருத்தவரை தேசியவாதம், வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளின் துயரங்கள் அவரின் தேசியவாத பட்டியலில் வராது. கிசான் சன்மான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதாக பாஜ அரசு அறிவித்தது. இது விவசாயிகளை இழிவுபடுத்தும் அறிவிப்பாகும். இதன்மூலம், ஐந்து பேர் இருக்கும் விவசாய குடும்பத்திற்கு தினம் 2 ரூபாய் தான் கிடைக்கும். இதுதான் விவசாயிகளுக்கு உதவும் அறிவிப்பா? விவசாயிகளுக்கு எதிரான பிரதமராகவே மோடி செயல்பட்டார். அவர் நாட்டு நலனை பற்றி கவலைப்படாமல், தன்னை விளம்பரம் செய்வதில் மட்டுமே அக்கறை காட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.