இந்து குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம் என்னை கைது செய்தால் பதற்றம் உருவாகும்: நடிகர் கமல்ஹாசன் எச்சரிக்கை

0 5

சென்னை: இந்து குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், என்னை கைது செய்வார் என்று நான் பயப்படவில்லை. அச்சப்படவும் இல்லை. ஆனால், என்னை கைது செய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் சூலூரில் பிரசாரம் செய்ய இருந்தார். அரவக்குறிச்சி பிரசார கூட்டத்தில், கமல்ஹாசன் மீது முட்டை, செருப்பு, கல் வீசப்பட்டதால் கலவரம் ஏற்பட்டது. அதனால், சூலூர் தேர்தல் பிரசாரத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து திருச்சியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 9 மணிக்கு சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கோட்சே பற்றி நான் கூறியதில் தவறான கருத்து எதுவும் இல்லை. நடந்ததை சரித்திர சான்றுடன் உண்மையைத்தான் பேசினேன். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது சென்னை மெரினாவில் நடந்த பிரசார கூட்டத்தில் இதே கருத்தைத்தான் பேசினேன். யாரும் எதிர்க்கவில்லை. அந்த கூட்டத்தில் எல்லா மதத்தினரும் இருந்தனர். அப்போது எதிர்க்காதவர்கள், இப்போது திடீரென எதிர்ப்பு காட்டுவது ஏன்? எனது பேச்சை இப்போதுதான் கவனிப்பது அவர்களது சவுகரியம். அவர்களுக்கு அரசியலில் நம்பிக்கை குறைந்துவிட்டது. எனவேதான் விவாதம் செய்கிறார்கள். இது பெரிய சர்ச்சையாக உருவாகவில்லை. சிலர் உருவாக்கியுள்ளனர். எனது பேச்சுக்கு மோடி கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு உடனே பதில் கூற போவதில்லை. அவருக்கு நிச்சயமாக சரித்திரம் பதில் கூறும். என்னை கைது செய்வார்கள் என்று நான் பயப்படவில்லை. அச்சப்படவும் இல்லை. என்னை கைது செய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதை வேண்டுகோளாக கூறவில்லை. அறிவுரையாகவே கூறிக் கொள்கிறேன். என்னை கைது செய்து விடுவார்களோ என பயந்து நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்கவில்லை. தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டி இருந்ததால், முன்ஜாமீன் கேட்டேன். சுதந்திரமாக பேச தடை விதிக்கின்றனர். ஆனால் மதத்தின் தலைவர்களுக்கு, அவ்வாறு பேசுவதற்கு விதிவிலக்கு இருப்பது போல் தெரிகிறது. எனது கருத்தை தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் ஆதரிக்காதது பற்றி எனக்கு வருத்தம் இல்லை. அது அவர்களுடைய கொள்கை. தீவிர அரசியலில் புதிதாக வரவில்லை. கடந்த வருடமே அரசியலுக்கு வந்து விட்டோம். திரைத்துறையை சார்ந்தவர்கள், ஆதரவு தெரிவிக்காதது பற்றியும் வருத்தம் இல்லை. வேறுவேறு கருத்துக்கள் இருக்கலாம். அதன்படி அவர்கள் செயல்படுவார்கள். பேசுவார்கள். ஏனென்றால் இது ஜனநாயக நாடு. இந்த சம்பவத்துக்கு பிறகுதான், காந்தி பற்றி நிறைய நினைவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனக்கு அரசியல் குறுக்கீடுகள் அதிகளவில் உள்ளது. அதனால்தான் சூலூரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கவில்லை. பதற்றமான சூழ்நிலை உள்ளதாக பிரசாரத்துக்கு என்று தடை போடுகின்றனர். அப்படி என்றால் சூலூரில் எதற்காக தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை ஏன் தள்ளி போடக்கூடாது என்பது எங்களுடையை பரிந்துரை. எனது நாக்கை அறுக்க வேண்டும் என்று ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார். நான் கவலைப்படவில்லை. அவரது பேச்சு, அவரின் குணாதிசயத்தை காட்டுகிறது. என் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அவர்களாக ஈடுபட்டதாக தெரியவில்லை. வேறு யாரோ தூண்டுதலின் பேரில்தான் நடந்துள்ளன. நான் ஒட்டு மொத்த இந்துக்களையும் கூறவில்லை. இந்துக்கள் யார், ஆர்எஸ்எஸ் யார் என்பதை பிரித்து பார்க்க வேண்டும்.பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ம் தேதி மாலை டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடக்க உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி எனக்கு எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கமல்ஹாசன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மக்கள் நீதி மய்யம் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள், நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னீப்பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர். அவரவர்களின் தீவிரவாதம் நம் நேர்மை வாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.