`அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; துவண்டுவிடாதீர்கள்!’ – ராகுல்காந்தி

0 9

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அக்கட்சியின் தொண்டர்களுக்கு, `கவனமுடன் இருங்கள்; அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது; துவண்டு விடவேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். 17-வது மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. `தமிழகத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ.க, அ.தி.மு.க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். விழிப்புடன் இருங்கள்’ என தி.மு.க தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு கடிதம் எழுதி அறிவுறுத்தினார். அதேபோல அ.தி.மு.க தரப்பிலும் கவனமுடன் இருக்க முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சரிவைத்தரும் என ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியானதும், பிரியங்கா காந்தி, “காங்கிரஸ் தொண்டர்களே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பால் மனம் தளர்ந்துவிடாதீர்கள். போலியான இவை, உங்கள் நம்பிக்கையை தகர்க்கவே பரப்பப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கவனமுடன் இருங்கள். நம் கடின உழைப்பு வீண்போகாது” என்று அறிவுறுத்தியிருந்தார்.இந்த நிலையில்,  ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ்காரர்களே! அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. கவனமாக இருங்கள். பயந்துவிடாதீர்கள், நீங்கள் உண்மைக்காகப் போராடுகிறவர்கள். தவறான செய்திகளாலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளாலும் துவண்டு விடாதீர்கள். காங்கிரஸ் கட்சி மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் கடின உழைப்பு எப்போதும் வீண்போகாது. ஜெய் ஹிந்த்” எனப் பதிவிட்டுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.