ராஜராஜ சோழனை பற்றி தனிப்பட்ட முறையில் ரஞ்சித் குறை சொல்லியிருந்தால் ஏற்புடையதல்ல: கே.எஸ்.அழகிரி அறிக்கை

0 6

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   பேரரசர் ராஜ ராஜ சோழனைப் பற்றி திரைப்பட இயக்குநர் ரஞ்சித் சில கருத்துக்களை சொன்னதாக செய்திகளில் பார்த்தேன்.  அவர் முழுவதுமாக என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது.  ஆனால் என்னை பொறுத்தவரை,  சோழர்களுடைய ஆட்சிக் காலத்தையும், போர்த் திறன் உள்ளிட்டவைகள் பற்றி நான் ஓரளவிற்குப் படித்து அறிந்து வைத்திருக்கிறேன்.   அப்படி பார்க்கிறபோது, சோழர்களுக்கிணையான ஒரு சாம்ராஜ்யம் என்று யாரை நாம் ஒப்பிடலாம் என்றால், மொகலாயர்களை சொல்லலாம். சோழர்களின் சமூக அமைப்பு என்பது பல படிநிலைகளைக் கொண்டதாக இருந்திருக்கிறது. உயர்குலப்  பெண்கள் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். தாழ்நிலைப் பெண்கள், கீழ் குலத்தை சேர்ந்தவர்கள் கோயில்களுக்கு நேர்ந்து விடப்பட்டார்கள்.  பெண் அடிமை இருந்திருக்கிறது.   மனிதர்கள் தங்களுடைய பிறப்பின் காரணமாக பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள்.  தீண்டாமைக் கொடுமை இருந்திருக்கிறது.  இவைகளெல்லாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இதற்கு ராஜராஜனோ, சோழர்களோ தான்  காரணம் என்று சொல்லமாட்டேன்.  அன்றைக்கு சமூகச் சூழல், சமூகப் படிநிலை அப்படித் தான் இருந்தது.   எனவே, ரஞ்சித் சொன்னது எல்லாம் ராஜராஜ சோழனை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லி இருக்கமாட்டார். மாறாக, அன்றைக்கு இருந்த சமூகச் சூழ்நிலையை விளக்கி இருக்கக்கூடும். எனவே, இன்றைய தமிழ்ச் சமூகம்  ஒரு கருத்தை ஒட்டிய விவாதமாக இதை எடுத்துக்கொள்ள வேண்டுமேயொழிய, ஏதோ ஒரு தனி வாதமாகவோ, ஒருவரை ஒருவர் பழித்ததாகவோ, இழித்ததாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இதை வைத்து வேறுபாடுகளை ஏற்படுத்த  வேண்டாம். ரஞ்சித் தனிப்பட்ட முறையில் ராஜ ராஜனைப் பற்றி குறை சொல்லி இருக்கிறாரா என்று எனக்கு தெரியாது.  அப்படிச் சொல்லி இருந்தால், அது ஏற்புடையது அல்ல.  ராஜராஜன் காலத்து சமூகத்தைப் பற்றி சொல்லி இருந்தால் அது  ஏற்புடையதே.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.