“அவர்களிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறோம்!” – துணை சபாநாயகர் பதவியை மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி

0 22

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட மக்களவைத் துணை சபாநாயகர் பதவியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. தற்போது பா.ஜ.க-விடம் 303 எம்.பி-க்கள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் 52 எம்.பி-க்களுடன் காங்கிரஸ் உள்ளது. மூன்றாவதாக 23 எம்.பி-க்களுடன் தி.மு.க-வும் நான்காவது இடங்களில் தலா 22 எம்.பி-க்களுடன் ஆந்திராவின் ஒய்.எஸ் ஆர் காங்கிரஸும், மேற்குவங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸும் உள்ளன.பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி-க்களைக் கொண்ட கட்சிகள் அனைத்தும் ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தவை. அவை அனைத்தும் பா.ஜ.க-வுக்கு பரம எதிர்க்கட்சிகள் என்றே கூற வேண்டும். ஆனால், இதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மட்டும் பா.ஜ.க-வுடன் பெரிதாக எந்த மோதலிலும் ஈடுபடவில்லை. அந்த வகையிலும், அதிக எம்.பி-க்களைக் கொண்ட பெரிய கட்சி என்ற அடிப்படையிலும் இந்த முறை  மக்களவைத் துணை சபாநாயகர் பதவி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் கதவை தட்டியது. ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர், “ எங்கள் கட்சிக்குத் துணை சபாநாயகர் பதவி தேவையில்லை. அந்தப் பதவி எங்களுக்கு வழங்கப்படுவதாக அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை எங்களுக்குப் பதவி வாங்கினால் நாங்கள், மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்ததாக ஆகிவிடும். எங்கள் மாநிலத்துக்குச் சிறப்பு அஸ்தஸ்து கிடைக்கும் வரை கட்சி அதைச் செய்யாது. ஆந்திராவுக்குச் சிறப்பு அஸ்தஸ்து வழங்கப்படாததுக்குக் காங்கிரஸும் ஒரு காரணம். ஆந்திரா இரண்டாகப் பிரிந்த மாநிலம். ஆனாலும் இதுவரை எங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. அதனால் நாங்கள் மத்தியில் உள்ள இரு பெரும் கட்சிகளிடமிருந்தும் சற்று விலகி இருக்கவே விரும்புகிறோம். நாங்கள் ஆளும் கட்சியுடன் எப்போதும் தொடர்பில் இருப்போம், நாட்டுக்காக அவர்கள் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு ஆதரவு அளிப்போம்.இந்தத் தகவலை எங்கள் கட்சி பா.ஜ.க தலைவர்களிடம் கூறிவிட்டது. துணை சபாநாயகர் பதவி என்பது ஒரு சடங்குக்காக மட்டுமே எங்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை நாங்கள் பா.ஜ.க-வுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தது. அதனால் துணை சபாநாயகர் வாய்ப்பு அ.தி.மு.க-வுக்கு அளிக்கப்பட்டு தம்பிதுரை துணை சபாநாயகராக இருந்தார். இந்த முறை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.