நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் தவறான தகவல் தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம் விலக வேண்டும்

0 6

* பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்* அதிமுகவுடன் கடும் வாக்குவாதம்சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தவறான தகவல் தெரிவித்த  அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும்,  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து  பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு  விலக்கு அளிக்க வேண்டும் என்று 1-7- 2017 அன்று ஏகமனதாக 2 மசோதா  நிறைவேற்றப்பட்டது. அந்த இரண்டு மசோதாவிற்கும் ஒப்புதல் வழங்குவதை நிறுத்தி  வைத்து இருப்பதாக குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் அந்த இரு மசோதாக்களையும்  திருப்பி அனுப்பி இருப்பதாக 22-9- 2017 மத்திய அரசின் கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர், முதலில் நிறுத்தி  வைக்கப்பட்டது என்று தான் தெரிவித்தார். இப்பொழுது நீதிமன்றத்தில்  நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள் என்று கூறினாரே தவிர, 2   மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்று இந்த அவையில்  தெரிவிக்கவில்லை.மத்திய அரசு அனுப்பி இருக்கக்கூடிய கடிதம்  வந்திருக்கின்றது. சட்டத்துறை அமைச்சரே, இந்த அவைக்கு உண்மைத் தகவலை  கொடுக்காமல் மறைத்து இருக்கின்றார் என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு.அரசியல்  சட்டப்பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவர் நடவடிக்கை  எடுத்திருக்கின்றார். அதே அரசியல் சட்டப் பிரிவின் படி, அப்படி திருப்பி  அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் செய்தியுடன் இந்தப் பேரவையில் 6  மாதத்திற்குள்  வைத்து, மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு  அனுப்பும் அதிகாரம், அதே அரசியல் சட்டப் பிரிவு 201ல் இந்த  சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மசோதா திருப்பி அனுப்பப்பட்டு  ஏறக்குறைய 19 மாதத்துக்கு மேல்  ஆகிவிட்டது. இனி சட்டமன்றத்திலும்,  இந்த 2 மசோதாக்களை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பை தமிழக சட்டமன்றம்  இழந்திருக்கின்றது. மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டப் பிறகும்.  குடியரசுத் தலைவர் அனுமதி தர வலியுறுத்துகின்றோம் என்று, கடந்த  19  மாதங்களாக தமிழக மக்களை இந்த அரசு ஏமாற்றி கொண்டிருக்கிறது. அதிமுகவின்  நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்விற்கு விலக்கு பெறுவோம் என்று  மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து நீங்கள் ஏமாற்றி இருக்கின்றீர்கள்.  நீட்  தேர்வால் பாதிக்கப்படக்கூடிய கிராமப்புற மாணவர், நகரப்புற மாணவர்கள்  அனைவருக்கும் இந்த அரசு செய்திருக்கக்கூடிய பச்சை துரோகம். எனவே, இதற்கு  தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய   வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.அமைச்சர் சி.வி.சண்முகம்:  22.7.17 அன்று நீட் தேர்வு மசோதாவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தான்  சொல்லப்பட்டது.  நீட் தேர்வு தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் மத்திய  அரசு வழக்கறிஞர், தமிழக அரசின் நீட் தேர்வு  விலக்கு மசோதா  நிராகரிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு  வந்த இமெயில் விளக்கத்தை தான்தெரிவித்திருக்கிறார்கள். என்ன காரணத்திற்காக  நிராகரிக்கப்பட்டது என்ற தகவலை தெரிவித்திருந்தால் குறைகளை நிவர்த்தி  செய்து மீண்டும் விலக்கு கோரி மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி  அனுப்பியிருப்போம். மீண்டும்  மசோதாவை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்.மு.க.ஸ்டாலின்:  இந்தக் கடிதம் வந்து 19 மாதம் ஆகியிருக்கின்றது. எத்தனையோ முறை சட்டமன்றம்  கூடியிருக்கின்றது. ஏன் இந்த அவையில் சட்டத்துறை அமைச்சர் கவனத்திற்கு  கொண்டு வரவில்லை.  எனவே அமைச்சர் ஏட்டிக்கு  போட்டியாக பேசிக்கொண்டிருந்தால்  இதனால் வாழ்வாதாரத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்கள் தான்  பாதிக்கப்படுகின்றார்கள் தவிர வேறல்ல. எனவே இதை அவர் பொறுப்பேற்றுக் கொள்ள  வேண்டும் என்றுதான் நான் சொல்லி  இருக்கிறேன். அப்படி, அவர் இதனை சொல்லத்  தவறிய காரணத்தினால் தான் பொறுப்பேற்றுக்கொண்டு ராஜினாமா செய்ய வேண்டும்  என்று சொல்கிறேனே தவிர வேறல்ல.அமைச்சர் சி.வி.சண்முகம்: என்ன  காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டது என்ற தகவல் குடியரசு தலைவரிடம்  இருந்து வரவில்லை. எதையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம்  எங்களுக்கு இல்லை.மு.க.ஸ்டாலின்: சட்டத்துறை அமைச்சராக  இருந்தாலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தாலும் இங்கு நான்  கேட்டிருக்கக்கூடிய கேள்விக்கு முறையான பதிலை சரியான விளக்கத்தை இந்த  அவைக்கு தராத காரணத்தினால்  அதைக் கண்டித்து திமுக  சார்பில் எங்களுடைய  கண்டனத்தை தெரிவிக்கின்ற வகையில் வெளிநடப்பு செய்கிறோம்.முதல்வர்  எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வுக்கு முக்கிய காரணமே காங்கிரஸ் தான்  என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வளவு பிரச்னைக்கும் மத்தியில் இருந்த  காங்கிரஸ் அரசுதான் காரணம்.அமைச்சர் சி.வி.சண்முகம்: நான் தவறான  தகவலை சொல்லியிருந்தால் அதற்கு முழுமையான பொறுப்பேற்று கொள்கிறேன். 8.2.19  அன்று சட்டமன்றத்தில் நான் சொன்னதை சொல்கிறேன். தமிழக சட்டமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட 2  மசோதாக்கள் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக  அனுப்பப்பட்டது. மத்திய அரசு என்ன காரணத்திற்காக நிறுத்தி வைத்திருந்தது  என்ற கடிதம் அனுப்பியிருந்தால், அதுபற்றி தெரிவித்திருப்போம். உயர்  நீதிமன்றத்தில், நீட் ேதர்வு தொடர்பான  வழக்கு விசாரணையில், மத்திய அரசின்  வழக்கறிஞர், தங்களுக்கு குடியரசு தலைவரிடம் இருந்து வந்த இ-மெயில் தகவல்  மூலமாக நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கத்தை தெரிவித்தார்கள். ஆனால் குடியரசு  தலைவரிடம் இருந்து அரசுக்கு  எந்த தகவலும் வரவில்லை. என்ன காரணத்துக்காக  நிராகரிக்கப்பட்டது என்ற தகவல், தமிழக அரசுக்கு வரும் பட்சத்தில், அதில்  ஏதாவது குறை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வோம். மீண்டும், மத்திய  அரசுக்கு நீட் தேர்வு விலக்கு  மசோதாவை அனுப்பும் உரிமை தமிழக அரசுக்கு  உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.திமுக, காங், முஸ்லிம் லீக் வெளிநடப்புமுதல்வர் மற்றும் சட்ட அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததாதல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் உறுப்பினர்களும், திமுக  உறுப்பினர்களுக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர். 10 நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.