மேகதாது அணை கட்ட டெல்லியில் சுற்று சூழல் மதிப்பீட்டு குழு கூட்டமா?: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

0 2

சென்னை: மேகதாது அணை கட்ட டெல்லியில் சுற்றுச் சூழல் மதிப்பீட்டுக் குழுக் கூட்டம் நடத்துவதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பு அணை கட்டுவதில் கர்நாடக அரசு முனைப்பாக இருக்கிறது. கடந்த ஜூன் 20ம் தேதி மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு அனுப்பிய கடிதத்தில் புதிய திட்ட  அறிக்கையை அனுப்பியது.அதில், திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.5,912 கோடி என்பதை ரூ.9 ஆயிரம் கோடி என்று உயர்த்தி இருக்கிறது. மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு 5,252 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு மத்திய அரசுக்கு  அனுப்பிய திட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க சட்டத்திற்கு எதிரானது. உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்ரவரி 16ல் அளித்தத் தீர்ப்புக்கும் எதிரானது.எனவேதான் தமிழ்நாடு அரசு கர்நாடகம் மாநிலம் மீது கடந்த 2018 டிசம்பர் 5ல் நீதிமன்ற அவதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், ஜூலை 19ம் தேதி சுற்றுச் சூழல் மதிப்பீட்டுக் குழுக் கூட்டம்  நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் மத்திய பாஜ அரசு, கர்நாடகா மாநிலத்திற்கு நயவஞ்சகமாக துணை போவது கண்டனத்துக்கு உரியதாகும்.காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தி பாலைவனமாக்கும் முயற்சி ஒருபக்கம், தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகம் மேற்கொண்டு வரும்  சதித் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போவதைத் தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே டில்லியில் ஜூலை 19ம் தேதி நடைபெறும் சுற்றுச் சூழல் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் மேகதாது அணைத் திட்டத்தை ஆய்வுக்கு  எடுக்கக் கூடாது, நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஜூலை 20ல் மதிமுக உயர்நிலை குழு மதிமுக உயர்நிலை குழு கூட்டம் ஜூலை 20ல் நடக்கிறது என்று வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டம் ஜூலை 20ம் தேதி காலை 10  மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 20ம் தேதி காலை 11 மணிக்கும், சென்னை எழும்பூரில் உள்ள  கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர்  திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.