அறிஞர் அண்ணாவின் குரல் ஒலித்த அவையில் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்த போகிறேன்: வைகோ பேட்டி

0 4

சென்னை: அறிஞர் அண்ணாவின் குரல் ஒலித்த அவையில் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்த போவதாக வைகோ கூறியுள்ளார். தமிழகத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 6 பேரும் இன்று போட்டியின்றி மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பிரதிநிதிகளாக மாநிலங்களவையில் தமிழகத்திற்கான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர். இதில் திமுக சார்பாக போட்டியிட்ட வைகோ இன்று தலைமைச் செயலக செயலாளர் சீனிவாசனிடம் இருந்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார். திமுக சார்பில் வெற்றி பெற்ற 3 பேரும் ஸ்டாலின் முன்னிலையில் சான்றிதழ்களை பெற்றனர். இதனையடுத்து தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, அறிஞர் அண்ணாவின் குரல் ஒலித்த அவையில் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்த போவதாகவும், கூட்டாட்சி தத்துவத்தை காக்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் எனவும் கூறினார். மேலும் ஜனநாயகத்திற்கு பேராபத்தாக உருவாகியுள்ள மதச்சார்பின்மையை தகர்க்கின்ற இந்துத்துவா சக்திகளின் படையெடுப்பை எதிர்க்க போவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, தமிழ் இனத்தை, தமிழகத்தை, தமிழக வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், தமிழக சுற்றுச்சூழலை நாசமாக்க கூடிய பல்வேறு திட்டங்களை எதிர்த்தும் எனது குரல் ஒலிக்கும் என்றும் வைகோ தெரிவித்தார். மாநிலங்களவை உறுப்பினரானதற்கான சான்றிதழ்களை பெற்றதை அடுத்து திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சண்முகம், வில்சன், மதிமுக எம்பி வைகோ ஆகியோர் திமுக தலைவா் ஸ்டாலினுடன் இணைந்து பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், அதிமுக சார்பில் தேர்வான உறுப்பினர்கள், அன்புமணி ஆகியோர் முதல்வா் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.