சோழிங்கநல்லூர் தொகுதியில் நடைபெற்றகுறைதீர் முகாமில் மக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

0 6

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள் 3 வருவாய் அலுவலகங்களாக பிரிக்கப்பட்டு, அதில் 7 ஊராட்சிகளுக்கு ஒரு வருவாய் அலுவலகம் என இயங்கி வருகிறது. கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகள் நீலாங்கரையை மையமாக வைத்து ஒரு வருவாய் அலுவலகத்தை உருவாக்கி, அங்கு புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டித்தர வேண்டும். மேலும், துரைப்பாக்கம், பெருங்குடி, சீவரம், காரப்பாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பள்ளிக்கரணையில் உள்ள வருவாய் அலுவலகம் வர வேண்டியுள்ளது. ஆகவே, நீலாங்கரைக்கும், பாலவாக்கத்திற்கும் தனித்தனியே கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும். ஈஞ்சம்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும். வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: உறுப்பினர் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று குறு வட்டம் மற்றும் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.அரவிந்த் ரமேஷ்: சோழிங்கநல்லூரில் உள்ள தாலுகா அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 1-7-2016 முதல் 13-1-2017 வரை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 2,435 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 685 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை முதியோர், மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் உள்ளிட்ட யாருக்கும் உதவித்தொகை வழங்கவில்லை.  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: சோழிங்கநல்லூர் தாலுகாவுக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் குறைதீர் முகாமில் கொடுத்த மனுக்கள் மீது தீர்வு காணப்படவில்லை என்று உறுப்பினர் கூறியுள்ளார். அம்மா திட்ட முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.