தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

0 5

சென்னை: நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அனுமதி வழங்கியுள்ளழது தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். நியூட்ரினோ தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ மையம் அமைத்தால் சூழலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தேனி மக்கள் நீண்ட காலமாக போராடி வருவதை தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் இத்திட்டம் பற்றி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது என்றும், ஆனால் அதிமுக அரசோ இத்திட்டத்திற்கு 25 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையின்றி மத்திய பாஜக அரசு இத்திட்டத்தை சிறப்பு திட்டமாக அறிவித்தது வேதனை அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியாறு, மேற்குதொடர்ச்சி மலை ஆகியவற்றுக்கு அருகில் நியூட்ரினோவை அனுமதித்தது கடும் கண்டனத்துக்குரியது என்றும், முதல்வரும், துணை முதல்வரும் உரிய அழுத்தம் கொடுத்து மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும் என்று அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார். நியூட்ரினோ திட்டம் கைவிடாவிட்டால் தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நெருக்கடி அதிமுக அரசுக்கு ஏற்படும் என்றும், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.