நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாக தமிழக மக்களை கொச்சைப்படுத்துவதா? முதல்வரின் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

0 1

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று தமிழக மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள்? என்று  முதல்வரின் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பொதுத்துறை, நிதித்துறை, வீட்டுவசதி துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  காவிரி பிரச்சினையை பொறுத்தவரைக்கும், இந்த மேகதாது பிரச்சினையைப் பொறுத்தவரைக்கும் பல முறை இதே சட்டமன்றத்தில் நாம் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.  ஆனால் இந்த சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு இதுவரை ஏற்றதாக தெரியவில்லை. தமிழகம் அமைதி பூங்கா என்று அடிக்கடி குறிப்பிட்டுச்சொல்கிறீர்கள். அது ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கிறது. குடிநீருக்காகக் குடங்களோடு தாய்மார்கள் சாலைமறியல் செய்யக்கூடிய காட்சி.  அது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரையில், இப்போதும் அங்கே நிச்சயமற்ற தன்மைதான் நிலவிக் கொண்டிருக்கிறது. தற்போதும் அங்குள்ள நிலைமை நீறுபூத்த நெருப்பாகத்தான் கனன்று கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், சேலம் எட்டு வழிச் சாலை பிரச்சினை. திட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை, வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.  எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினரும் டெல்லியிலே நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியிருக்கிறார். ஆர்ப்பாட்டம் நடத்தாமல், போராட்டம் நடத்தாமல், யாரும் இல்லை, போராடக்கூடியவர்களை அழைத்து பேசுவதற்கு இந்த அரசு ஏன் தயங்குகிறது என்பதுதான் என் கேள்வி. இன்று ஒரே நாடு, ஒரே நீதிபதி தேர்வு என்று மாநிலத்திலுள்ள மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கும், அகில இந்திய அளவில் தேர்வு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இருப்பவர்களையே, தமிழ்நாட்டில் நீதிபதிகளாக நியமிப்பதற்கு அது வழிவகுத்துவிடும். இங்குள்ள வழக்கறிஞர்கள், சட்டம் படித்த இளைஞர்களுடைய வாய்ப்புகளும் பறிபோய்விடும். மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி என்ற தீர்மானத்தை இந்த அவையிலே மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதி தவிர, அனைத்து இடங்களிலும் திமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். அதேபோல், சட்டமன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 22 தொகுதிகளில் 13 தொகுதிகளை திமுக கைப்பற்றி இருக்கிறது.  அதைவிட முக்கியமாக 12 தொகுதிகளை ஆளுங்கட்சிடம் இருந்து திமுக பறித்திருக்கிறது. இந்த வெற்றியை தாங்கிக்கொள்ளன முடியாதவர்கள், அந்த வெற்றியைப்பற்றிக்கூட இந்த சபையிலே சிலபேர் உரையாற்றி இருக்கிறீர்கள்.  அதனைக்கூட அவருடைய அரசியல் என்று நான் கருதுகிறேன். ஆனால், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது தி.மு.க. சின்னப்பிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதுபோல, ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்னார்கள்.  இதைவிட தமிழ்நாட்டு மக்களை யாரும் கொச்சைப்படுத்த முடியாது.  கோடிக்கணக்கான தமிழ் மக்களை மிட்டாய்க்கு ஏமாறுவது என்று முதலமைச்சரே இங்கே பேசியது பதிவாகி இருக்கிறது. நாங்கள் கொடுத்தது வாக்குறுதிகள்தான். மிட்டாய்கள் அல்ல. நீங்கள் மீண்டும் மக்களிடத்திலே சென்று வாக்கு கேட்க வேண்டிய நிலையில் இருக்கக்கூடியவர்கள். அதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். அப்படி வருகிறபோது, நாங்கள் தந்த வாக்குறுதிகளை உறுதியாக, நிச்சயமாக நிறைவேற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார். வேளச்சேரி- செயின்ட்தாமஸ் பறக்கும் ரயில் என்னாச்சு?வேளச்சேரியிலிருந்து செயின்ட்தாமஸ் மவுண்ட்டுக்கான பறக்கும் ரயில் திட்டம்  மார்ச் 2018-ல் முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. சென்ற 2017-2018ம்  ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பிலேயும் அதைப்பற்றி  தெரிவித்துள்ளீர்கள். ஆனால், 2018 – 2019ம் ஆண்டிற்கான கொள்கை விளக்க  குறிப்பில் மேலும் 18 மாதங்கள் ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  அதுமட்டுமல்ல, 2019-2020-லும் அதைத்தான் சொல்கிறீர்கள். ஆகவே, விதி  110-ன்கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகளும், இந்த துறை சம்பந்தமாக  அறிவித்திருக்கின்ற அறிவிப்புகளும் வெறும் அறிவிப்புகளாகத்தான்  காட்சியளித்துக் கொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.