தமிழகத்தில் இனி எப்போதுமே மின் வெட்டு இருக்காது: அமைச்சர் தங்கமணி உறுதி

0 6

நாமக்கல்: கோடை காலம் மட்டுமின்றி தமிழகத்தில் இனி எப்போதுமே மின்வெட்டு இருக்காது என அமைச்சர் தங்கமணி கூறினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மின்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்பு அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் தொடர்ந்து தரமான மின்சேவைகளை அளிக்க, மின் துறையின் செயல்பாடுகளை மண்டல வாரியாக ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே திருச்சி மண்டல ஆய்வு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது நாமக்கல்லில் ஆய்வு நடந்துள்ளது. மின் உற்பத்தி மற்றும் விநியோகக்கத்திற்குத் தேவையான உபகரணங்கள் தேவையான அளவில் உள்ளன.தமிழகத்தில் இனி கோடை காலம் மட்டுமின்றி எந்தக் காலத்திலும் மின் வெட்டு இருக்காது. குறிப்பிட்ட பகுதியில் மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் விழுந்தால் அதை சரிசெய்யும் நேரம் வரையிலும் மட்டுமே மின் தடை செய்யப்படும்.மின்வாரியத்தில் பல்வேறு சேவைகள் மொபைல் ஆப் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் மின் இணைப்பு அளிக்கும் திட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு  ஜூலையில் தொடங்கி, இதுவரை 3 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தட்கல் முறையில் விவசாயிகளுக்கு மும்முனை மின்இணைப்பு வழங்கும் திட்டத்தில் கடந்த ஆண்டு 10 ஆயிரம் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.மின்சாரத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகள் சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.