மதசார்புள்ள ஆட்சியை அப்புறப்படுத்த மதசார்பற்ற கட்சி தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் : மு.க.ஸ்டாலின் பேட்டி

0 13

சென்னை: மதசார்புள்ள ஆட்சியை அப்புறப்படுத்த அகில இந்திய அளவில் உள்ள மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து  முயற்சிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை,  அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடகா தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன? மதச்சார்புள்ள ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டுமென்றால், அகில இந்திய அளவில் உள்ள மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே அது பயனளிக்கும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள்  வெளிக்காட்டியிருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.கர்நாடகாவில் பாஜக ஆட்சி வந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜனும் தெரிவித்திருந்தார்களே? உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், உடனடியாக தமிழ் நாட்டு  மக்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கி, தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் உள்ள நட்புணர்வை  வளர்க்கும் முயற்சியில், புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசு ஈடுபட வேண்டும். அந்த முயற்சியில் ஈடுபடும் என்று நான் நம்புகிறேன்.அரசின் சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று நீங்கள் தெரிவித்தும், இந்த அரசு அதை நிறைவேற்ற முன்வரவில்லையே? தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்ற போது, காவிரி பிரச்னைக்காக பலமுறை அனைத்து கட்சி கூட்டம்  கூட்டி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, அட்வகேட் ஜெனரலிடம் விவாதித்து, அதன் பிறகே நீதிமன்றத்தில் அரசின் கருத்துகளை, அரசின்  நிலைப்பாட்டை எடுத்து வைத்திருக்கிறார். எனவே, அந்த அடிப்படையில்தான் நான், உச்ச நீதிமன்றத்தில் எந்தவிதமான கருத்துகளை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்க,  தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகளை அழைத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டுமென்று  அறிக்கை வெளியிட்டு  இருந்தேன். இப்போதும் குடி முழுகி விடவில்லை. அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால் அது பயனுள்ளதாக இருக்கும் என்பதே எனது கருத்து.  மதச்சார்பற்ற அரசியல் தலைவர்களை ஒன்றிணைக்க திமுக முயற்சிக்குமா? தேர்தல் வரும் நேரத்தில் கண்கூடாக நீங்கள் அதை பார்ப்பீர்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.