திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 8

சென்னை: திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, திமுகவின் தலைவர் பதவி காலியாக இருந்தது. தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுத் தாக்கல் செய்தனர். இந்தத் தேர்தலில் வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாத நிலையில், கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். இதில் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அன்பழகன் அறிவித்தார். இந்நிலையில் துரைமுருகன் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவை முதன்மை செயலாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.