அகம்பாவம் கொண்ட மத்திய அரசு, அலட்சியமான மாநில அரசு இரு அரசுகளும் தொலைந்திடும் நாள் வெகு தொலைவில் இல்லை : மு.க.ஸ்டாலின்

0 11

சென்னை:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காவிரி என்பது வெறும் ஆறு அல்ல. அது நம் தமிழ்நாட்டுக்குத் தாய். அதனால்தான், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து திமுகவும், தோழமைக் கட்சிகளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தன. அதனடிப்படையில் திருச்சி உழவர் சந்தைத் திடல் நிரம்பி வழிந்து திணறும் வகையில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு அதிர வேண்டும் எனக் குறுகிய இடைவெளியில் அயராது பாடுபட்டார் திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு. டிசம்பர் 4ம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் மலைக்க வைக்கும் மாநாடு போலக் காட்சியளித்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் தேசிய லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது ஆகியோர் எழுச்சிமிகு கண்டன உரையாற்றினர். அதன் விளைவுதான், காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்யக் கோரும் அவசர சட்டப்பேரவைக் கூட்டம். மக்களாட்சி மாண்புகளைப் புறக்கணிக்கும் மாநில ஆட்சியாளர்கள், திருச்சியில் மக்கள் கடலெனத் திரண்ட ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துகிறார்கள்.  உரிமைக்கான போராட்டத்தில் இது தொடக்க கட்ட வெற்றி. அகம்பாவம் கொண்ட மத்திய அரசு – அலட்சியம் மிக்க மாநில அரசு இரண்டும் நீடிக்கும் வரை தமிழ்நாட்டின் நிலை இப்படித்தான் இருக்கும். திருச்சிப் போராட்டத்தில் தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் சூளுரைத்தது போல மத்திய, மாநில அரசுகள் தொலைந்திடும் இன்பநாள் வெகுதொலைவில் இல்லை. திருச்சியில் தொடங்கியது திக்கெட்டும் பரவும். போராட்டக்களம் பூகம்பமாகும். அது தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். மத நல்லிணக்க ஆட்சி மத்தியிலும், மக்கள் நலன் காக்கும் ஆட்சி மாநிலத்திலும் விரைவில் மலரும்.  இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.