குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

0 8

சென்னை: குட்கா வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆஜராகியுள்ளார். குட்கா ஊழல் வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை அடுத்து இன்று ஆஜராகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் அமைச்சரின் உதவியாளர் சரவணன்  ஆஜரானார். ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாததால் சரவணனுக்கு சிபிஐ இறுதி கெடு விதித்திருந்தது. தடை செய்யப்பட்ட குட்கா விற்க கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு வருமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பொருட்கள் சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில், குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.இதேபோல், இந்த வழக்கில் தொடர்புள்ளதாக கூறப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பெயர் இடம்பெறவில்லை. இது முழுக்க, முழுக்க இவர்களை இந்த வழக்கில் இருந்து தப்ப வைக்கும் முயற்சி. எனவே, இந்த விவகாரம் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு, நேர்மையான, வெளிப்படைத் தன்மையுடனான விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.இந்த வழக்கை மீண்டும் சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும். டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லையேல், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டி வரும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கும், சிபிஐ பொறுப்பு இயக்குனருக்கும் புகார் மனு அளித்தார். மேலும், சிபிஐயில் குட்கா வழக்கை கண்காணித்து வந்த டிஐஜி சின்கா, எஸ்பி கண்ணன் ஆகியோரும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.ஏற்கனவே, இதுதொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, இறுதி கெடுவாக அவருக்கு இன்று காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. குட்கா உரிமையாளர் மாதவராவ், குட்கா விவகாரத்தில் அமைச்சருக்காக சரவணன்தான் பணம் வாங்கிச் சென்றார் என்று வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்நிலையில் சரவணன் இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.