தமிழகத்தில் தாமரை மலரப் போவதில்லை வருகிற தேர்தலில் நோட்டாவைவிட அதிக ஓட்டு வாங்குவது பாஜவுக்கு நல்லது: தமிழிசைக்கு கடம்பூர் ராஜூ பதிலடி

0 7

கோவில்பட்டி, ஜன.12: “வருகிற தேர்தலில் நோட்டாவைவிட அதிக வாக்குகள் வாங்குவது பா.ஜ.க.வுக்கு நல்லது.  தமிழகத்தில் தாமரை மலரப் போவதில்லை’’ என்று தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்தார். தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி இல்லை என்றும், இதனால் தாமரை மலரும் என்றும் அதிமுக அரசுக்கு எதிராக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை  கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு  அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி நடக்கிறதா, இல்லையா என்பதை மக்கள்தான் கூறவேண்டும். தமிழிசை போன்றவர்கள் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை. ஜெயலலிதா மறைவுக்குபின் அவரது வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். வருகிற தேர்தலில் நோட்டாவைவிட அதிக வாக்குகள் வாங்குவது பா.ஜ.க.வுக்கு நல்லது. பிரதமர் நரேந்திரமோடி, நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோருக்கு கூட்டணி குறித்து அழைப்பு விடுத்தது தொடர்பாக, அவர்களிடம்தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக உள்ளது. மற்றவர்களை பற்றி அதிமுகவுக்கு கவலையில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா யாரிடமும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனியாக தேர்தலை சந்தித்தார். அத்தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு அதிக வாக்கு வங்கிகள் இருப்பது மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் தாமரை மலரப் போவது இல்லை. அதிமுக ஆட்சிதான் தொடரும். இவ்வாறு அமைச்சர் கடம்பூர்ராஜூ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.