சொன்னதை செய்தாரா உங்கள் எம்.பி?

0 6

இசையோடு சேராத பாட்டு – இன்பமில்லை. பகுத்தறிவு இல்லாத பார்வை-பயனில்லை. சொல் ஒன்று; செயல் வேறு- இது, நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு. இதில், உங்கள் தொகுதி எம்பி. எப்படி? 2014 தேர்தலில் சொன்னதை செய்தாரா? தொகுதியை கவனித்தாரா? வளமாக்கினாரா?அல்லது தன்னை வளமாக்கினாரா? இதை பற்றி அலசுவதுதான் இந்த பகுதி. காரணம், மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே பாக்கி. அதில், உங்கள் தொகுதியின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கப் போகும் சக்தி நீங்கள்தான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!’ இனி, முடிவு உங்கள் கையில்!சொன்னதை செய்யாத செங்குட்டுவன்:ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட அதே வேலூர் மண்தான், அவர்களின்  ஆட்சிக்கும் முடிவுரை எழுதியதற்கான முதல் சங்கொலியையும் எழுப்பியது. கி.பி.1806ம் ஆண்டு ஜூலை 10ம் நாள் வேலூர் கோட்டையில் எதிரொலித்த அந்த சுதந்திர சங்கொலிதான், தமிழகத்தில் ஆங்காங்கே சிறிய அளவில் சிதறிக்கிடந்த பாளையக்காரர்களின் எழுச்சிக்கு முத்தாரமாய் அமைந்தது. அந்தளவு தமிழகத்தின் அரசியல்  மையப்புள்ளியை அன்று தொட்டு இன்று வரை தன்னிடத்தே வைத்துக் கொண்டுள்ளது வேலூர். மேலும், திராவிட இயக்கத்தின் முன்னுரை எழுதப்பட்ட இடமாகவும் விளங்கியது. இங்குதான், 1949ம் ஆண்டு திமுக.வை   தொடங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், தமிழகத்தின் ஒட்டு மொத்த தேர்தல் தீர்ப்பு என்பது வேலூர் மக்களவை தொகுதியின் முடிவை வைத்தே கணிக்கப்படும். இதில் இருந்தே இந்த தொகுதியின் அரசியல் முக்கியத்துவத்தையும், மக்களின் அரசியல் தெளிவையும் அறியலாம்.இந்த தொகுதியின் தற்போதைய எம்பி.யாக இருப்பவர் செங்குட்டுவன். அதிமுக.வை சேர்ந்தவர். 2014 மக்களவை தேர்தலில் இவர் பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், அவற்றில் நிறைவேற்றியது என்பது எதுவும் கிடையாது என்பது தொகுதி மக்களின் ஒட்டு மொத்த குற்றச்சாட்டாக உள்ளது. ஒரு காலத்தில் பாலாறு ஓடியபோது தேனாறு ஓடிய மாவட்டம். இப்போது, காய்ந்து போன கருவாடாகி, குடிநீருக்கே அல்லல்படும் நிலை உள்ளது. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு, விவசாயம் பொய்த்த போதிலும் ‘டாலர் நகரம்’ என்ற பெருமையுடன் இன்றளவும் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தோல் தொழிற்சாலைகள். நாட்டுக்கு ஆண்டுக்கு ₹7 ஆயிரம் கோடிக்கு மேல் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தோல் பொருள் ஏற்றுமதிக்காக, இந்த தொழிற்சாலை அதிபர்கள் சுயமாக சேர்ந்து சிறப்பு ஏற்றுமதி மையம் அமைத்துள்ளனர். ஆனால், தோல் பொருள் உற்பத்திக்கான மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசிடமோ, மக்களவையிலோ செங்குட்டுவன் பேசவே இல்லை என்கின்றனர் ேதால் தொழிற்சாலை அதிபர்களும், வர்த்தகர்களும்.குடியாத்தத்தில் கைத்தறி பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இவரால் கண்டு கொள்ளப்படவில்லை. குடியாத்தம் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்களும் ஜிஎஸ்டி, மூலப்பொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கோரி வருகின்றனர். இவர்களின் இந்த கோரிக்கையை வேலூர் தொகுதியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் நிறைவேற்றி கொடுக்க, செங்குட்டுவன் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் தீப்பெட்டி தொழிலதிபர்கள். மேலும், கைத்தறி ஏற்றுமதி மையம் அமைக்க தேசிய கைத்தறி வளர்ச்சி நிறுவனத்துடன் பேசுவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். பேரணாம்பட்டில் அரசு கலைக் கல்லூரி, குடியாத்தம் புறவழிச்சாலை கோரிக்கைகளையும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதுதவிர, தென்னை நார் பொருள் உற்பத்தி தொகுப்பு குடியாத்தத்தில் அமைந்துள்ளது. பலமுறை கயிறு வாரிய தலைவர் வேலூர் வந்த போதும், தென்னை நார் பொருள் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையிலோ, அவற்றின் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலோ எம்பி செங்குட்டுவன் அக்கறை காட்டவில்லை என்பதும் தென்னை நார் பொருள் உற்பத்தியாளர்களின் வேதனை குரலாக ஒலிக்கிறது. குடியாத்தம் ரயில் நிலையத்தில் லால்பாக், நெல்லை எக்ஸ்பிரஸ் உட்பட 5 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற 20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் செங்குட்டுவன் உறுதி அளித்தார். அது தொடர்பாக மக்களளவையில் பேசினாரா? என்பது அவருக்குத்தான் வெளிச்சம் என்று அதிமுக.வினரே வேதனை தெரிவிக்கின்றனர். இத்தனைக்கும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிதான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம். இங்கு மட்டும் அவருக்கு 35 ஆயிரம் வாக்குகள் அதிகமாக கிடைத்தன. அதேபோல், தோல் பதனிடுதல், தோல் பொருள் உற்பத்தியில் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் ஆம்பூர், வாணியம்பாடியை ஒருங்கிணைத்து வடமாநிலங்களுக்கு செல்லும் வகையில் சரக்கு ரயில் முனையம், தென்மாவட்டங்களுக்கும், வடமாநில நகரங்களுக்கும் செல்லும் முக்கிய ரயில்களை ஆம்பூரில் நிறுத்தி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டு கொள்ளப்படவில்லை. வாக்கு கேட்டு வந்தபோது, ‘வாணியம்பாடி, பேரணாம்பட்டில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன். பாலாற்றில் நிரந்தரமாக தண்ணீர் வரும்படி செய்வேன், வாணியம்பாடியில் தோல் மற்றும் தோல்பொருள் தொழிற்சாலைகளில் வேலைசெய்து வரும் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்களின் நலனுக்காக இங்கு இஎஸ்ஐ மருத்துவமனை கொண்டு வருவேன், தோல் தொழில் பயிற்சி நிறுவனம் அமைப்பேன்’ என்று வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், இதுவரை கலைக்கல்லூரியும் வரவில்லை. இஎஸ்ஐ மருத்துவமனையும் வரவில்லை. இவற்றை எல்லாம் கொண்டு வருவதாக சொன்ன அவரை, ‘எம்பி.யை காணவில்லை’ என்று தொகுதி மக்கள் தேடும் நிலை உள்ளது.தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணப்புக் குழு மாநில பொதுச் செயலாளரும், பாலாறு பாதுகாப்பு இயக்க நிர்வாகியுமான பாலாறு வெங்கடேசன் கூறுகையில், ‘‘பாலாறு- தென்பெண்ணை இணைப்புக்கு வழி செய்வேன். பாலாற்றை சுத்தப்படுத்தி நிரந்தரமாக தண்ணீர் வருவதற்கு வழி செய்வேன் என்று அளித்த வாக்குறுதியை எம்பி நினைவில் வைத்திருப்பாரா தெரியவில்லை. வாணியம்பாடி மட்டுமல்ல, வேலூர் தொகுதியில் அவர் சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என்பதே நிஜம். உதயேந்திரம் பேரூராட்சியில் அப்போதைய எம்பி என்.டி.சண்முகம் 10 சிமென்ட் சாலைகளை போட்டார். 2 சத்துணவு கூடங்கள், ஒரு பள்ளிக்கட்டிடம், காரிய மண்டபம் ஆகியவற்றை எம்பி நிதியில் செய்து கொடுத்துள்ளார். காதர் மொய்தீன் எம்பி ஆழ்துளை கிணறுகளை அமைத்துக் கொடுத்துள்ளார். அப்துல் ரஹ்மான் எம்பி 10க்கும் மேற்பட்ட ஹைமாஸ் விளக்குகள் அமைத்து கொடுத்துள்ளார். 4 லட்சத்தில் அனைத்து ஆழ்துளை கிணறுகளுக்கும் மோட்டார்களுடன் சின்டெக்ஸ் டேங்குகள் அமைத்து தந்துள்ளார். இதுவரை ஒரு நயா பைசா கூட செலவழிக்காத எம்பி யார் என்றால், அது செங்குட்டுவன்தான். போன் போட்டால் எடுப்பார், விவரம் கேட்பார். அதோடு சரி. மறுபடியும் போன் போட்டால் எடுக்க மாட்டார். லைனை துண்டித்து விடுவார்’ என்றார். வேலூர் வட்டச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்த செங்குட்டுவன், அவரது தொகுதி நிதியில் கமிஷனை பார்த்து சிலவற்றை செய்ததுதான் மிச்சம். ‘வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம், டயாலிசிஸ் சிகிச்சைக்கான உபகரணம் வந்தும் அதற்கான கட்டிடம் இல்லாததால் வீணாகிறது. அதற்கான கட்டிடம் கட்டித்தர கேட்டோம். செய்வதாக உறுதி அளித்தவர் அப்படியே மறந்து போனார்’ என்கின்றனர் இப்பகுதி மக்கள்.  செங்குட்டுவன் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம்சேரி கிராமத்தை தத்து கிராமமாக தேர்ந்தெடுத்தார். அப்போது விரைவில் இங்கு அடிப்படை பிரச்னைகளை களைவேன். கிராமத்தில் அனைத்து வசதிகளை கொண்டதாக மாற்றுவேன் என்று கூறினார். சாலையை விரிவுப்படுத்தி தடுப்புச்சுவர் கட்டினார். ஹைமாஸ் விளக்குகளை அமைத்தார். மற்றபடி தத்தெடுத்த கிராமம் அப்படியேத்தான் உள்ளது. கிராமம் எந்த வகையிலும் ஏற்றம் பெறவில்லை என்று வேதனை தெரிவித்தனர் அகரம்சேரி மக்கள்.பாலாறு- தென்பெண்ணை இணைப்புத் திட்டத்துக்கு இப்போதுதான் 650 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த செங்குட்டுவன், தற்போதைய முதல்வர் பழனிசாமியிடம் பேசி இத்திட்டத்தை தொடங்கி முடித்து இருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை. இத்திட்டம் நிறைவேறினால் வேலூர் மாவட்டத்தில் 39 லட்சம் பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 லட்சம் பேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 லட்சம் பேர் பயனடைவர். இடையில், ‘மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும்’ என  தமிழக முதல்வர் கூறினார். இந்த திட்டத்தில் எம்பி.யின் செயல்பாடு சரியாக இல்லாததால்,  நிறைவேறாத திட்டமாக பாலாறு- தென்பெண்ணை இணைப்புத் திட்டம் உள்ளது.‘பாலாறு, தமிழகத்தில் 222 கி.மீ தூரம் பயணித்து செங்கல்பட்டு அருகே வங்கக்கடலில் சங்கமிக்கிறது. இதில், ஆந்திராவில் மட்டுமே 32 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இது பற்றி இம்மாவட்டத்தை சேர்ந்த எம்பி செங்குட்டுவனின் குரல் மக்களவையில் ஓங்கி ஒலிக்காததால் ஏமாந்து நிற்கிறோம்’ என்று விவசாய சங்கங்கள் வேதனை தெரிவிக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் மாநகராட்சியான வேலூரில், தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை சந்திப்பில் பேலஸ் சந்திப்பில் சுரங்கப் பாதை, வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்கம் என பல கோரிக்கைகளும் கண்டு கொள்ளப்படவில்லை. வேலூர் விமான நிலையம் மட்டும் மத்திய அரசின் கொள்கை முடிவுப்படி உதான் திட்டத்தின் கீழ் விரைவில் செயல்படுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மற்றபடி, இதிலும் ஒரு துரும்பையும் எம்பி கிள்ளிப்போடவில்லை.‘‘தேர்தலின் போது ஓட்டு கேட்டபோது அவரின் முகத்தை பார்த்தோம். அப்போது கூட அவர் சிரித்ததை பார்த்ததில்லை. அதோடு சரி, எங்க எம்பி எப்படி இருப்பாரு? என்பதே மறந்து போய்  விட்டது. அரசு நிகழ்ச்சிகளிலும் காண முடிவதில்லை. ஏதாவது சிபாரிசு கேட்டு போனால்,  காட்பாடியில் இருக்கும் அவரது வீட்டு வாசலில் ஒரு பெட்டி இருக்கும். அதில்தான், எதையும் மனுவாக எழுதி போட வேண்டும். அவர் நேரில் வந்தாலும், என்ன ஏது என்று கேட்க மாட்டார். முன்பு இருந்த எம்பி.க்கள் வெளியூரை சேர்ந்தவங்களாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்வது மட்டுமின்றி, தனியாக அலுவலகம் வைத்து பரிந்துரை கடிதங்களை கொடுப்பார்கள். குறைகளை காது கொடுத்து கேட்பார்கள். இவர் எதற்கும் உபயோகமாக இல்லை’’ என நாம் சந்தித்த தொகுதி மக்கள் ஒவ்வொருவரும் புலம்பி தீர்த்தனர். சொத்து மதிப்பு2014 தேர்தலில் தனது வேட்பு மனுவில், செங்குட்டுவன் தனக்கு மொத்தம் 91 லட்சத்து 97 ஆயிரத்து 355 மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். வங்கிக்கடன் 4 லட்சத்து 40 ஆயிரத்து 478 என கூறியுள்ளார்.எம்பி நிதி என்னாச்சு?ஆண்டுக்கு 5 கோடி என கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 25 கோடியில், பிற ஆளுங்கட்சி எம்பி.க்களை போன்றே இவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஹைமாஸ் விளக்குகளுக்கு தானாம். காரணம், அதில்தான் கமிஷன் அதிகமாம். மற்றபடி, சொல்லிக் கொள்ளும்படி எம்பி நிதியில் உருப்படியாக செய்தது என்பது ஏதுமில்லை.‘நிறைய செய்துள்ளேன்’தொகுதிக்கு செய்துள்ள நன்மைகள், நிறைவேற்றிய வாக்குறுதிகள் பற்றி அறிவதற்காக எம்பி செங்குட்டுவனை நாம் தொடர்பு கொண்ட போது, ‘‘தொகுதிக்கு நிறைய செய்துள்ளேன். எனது அலுவலகத்தில் விவரம் உள்ளது. உங்கள் இ-மெயில் அல்லது அலுவலக இ-மெயில் அட்ரஸ் மெசேஜ் செய்யுங்கள். விவரத்தை அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். அதன்படி, முகவரிகளை அனுப்பி வைத்தும், அவர் விவரம் எதையும் அனுப்பவில்லை. அதன் பிறகு கைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.இதுவரை வெற்றி கண்டவர்கள்1951 – டாக்டர் ராமச்சந்தர் (சிடபிள்யூஎல்)1951 – எம்.முத்துகிருஷ்ணன் (காங்கிரஸ்)1957 – எம்.முத்துகிருஷ்ணன், என்.ஆர்.முனுசாமி (காங்.)1962 – அப்துல் வாஹித் (காங்கிரஸ்)1967 – குசேலர் (திமுக)1971 – ஆர்.பி.உலகநம்பி (திமுக)1977 – வி.தண்டாயுதபாணி (காங்கிரஸ்)1980 – ஏ.கே.ஏ.அப்துல்சமத் (முஸ்லிம் லீக்)1984 – ஏ.சி.சண்முகம் (அதிமுக)1989 – ஏ.கே.ஏ.அப்துல் சமத் (முஸ்லிம் லீக்)1991 – பி.அக்பர் பாஷா (காங்கிரஸ்)1996 – பி.சண்முகம் (திமுக)1998 – என்.டி.சண்முகம் (பாமக)2004 – கே.எம்.காதர்மொய்தீன் (முஸ்லிம் லீக்)2009 – அப்துல்ரஹ்மான் (முஸ்லிம் லீக்)2014 – பி.செங்குட்டுவன் (அதிமுக)

Leave A Reply

Your email address will not be published.