இனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு – தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க

0 5

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி பொறுப்பு வகித்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதே நிலை கர்நாடகாவிலும் உள்ளது. சட்டமன்றத் தேர்தலைப்போல் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜனதா தளமும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளத்துக்கு எட்டுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தத் தொகுதி, வேட்பாளர்கள் போன்ற எந்தத் தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், மாண்டியா தொகுதியையும், ஹாசன் தொகுதியையும் ஜனதா தளம் தங்களுக்கு வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளது.இந்த இரு தொகுதிகளிலும் தேவகவுடாவின் பேரன்கள் போட்டியிடவுள்ளனர். மாண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், ஹாசன் தொகுதியில் ரேவண்ணாவின் மகன் ப்ரஜ்வால் ரேவண்னாவும் போட்டியிடவுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் பிரசாரத்தை ஜனதா தளம் நேற்று ஹாசன் தொகுதியிலிருந்து தொடங்கியது.அதில் பேசிய தேவகவுடா, `வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. இனிவரும் எந்தத் தேர்தலிலும் களமிறங்கப்போவதில்லை. மேலும், அரசியலிலிருந்து ஓய்வு பெறலாம் என்பதையும் ஆலோசித்து வருகிறேன். ஹாசன் தொகுதியில் என் பேரன் ப்ரஜ்வால் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியில் இதுவரை நீங்கள் எனக்கு அளித்து வந்த ஆதரவை என் பேரனுக்கு அளிக்க வேண்டும். அரசியலில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதைக் கேட்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. மாண்டியா தொகுதியில் என் இன்னொரு பேரன் நிகில் போட்டியிடவுள்ளார். ஆனால், அவர் போட்டியிடுவதற்கு மாண்டியா மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நான் மாண்டியாவுக்குச் சென்று 60 வருடங்களாக நான் அவர்களுக்காகப் போராடியதை எடுத்துக் கூறுவேன்’ எனப் பேசினார். தேர்தலில் நிற்கப்போவதில்லை என தேவகவுடா மேடையிலேயே அழுதுவிட்டார். தற்போது அதை எதிர்க்கட்சியான பா.ஜ.க விமர்சித்து வருகிறது. இது தொடர்பாக பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தில், `அழுவது மட்டும் ஒரு கலையாக இருந்தால் தேவகவுடாவும் அவரது குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக மக்களை முட்டாளாக்கி அழுவதில் சாதனை படைத்திருப்பார்கள். ஆனால் உண்மை என்னவெனில், `தேர்தலுக்கு முன்னர் தேவகவுடாம் அவரது குடும்பத்தினரும் அழுவார்கள். தேர்தலுக்குப் பின்பு அவர்களுக்கு வாக்களித்த மக்களும் அவர்களது குடும்பத்தினரும் அழுவார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இது கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

Leave A Reply

Your email address will not be published.