மதுரையில் போட்டியிடுகிறாரா ‘வேள்பாரி’ எழுத்தாளர் சு.வெங்கடேசன்?

0 3

 வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிவிட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதில்,  காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும்,  ம.தி.மு.க-வுக்கு மக்களவை, மாநிலங்களவையில் தலா ஒரு தொகுதியும், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும்,  இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படி எண்ணிக்கை அளவிலான பேச்சுவார்த்தை முடிவாகிவிட்ட நிலையில், எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பது இன்னும் முடிவாகவில்லை.அதுகுறித்த பேச்சுவார்த்தை  நடைபெற்றுவருகிறது.  அதில்,  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை,கோவை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது. அதில், மதுரையில் வேள்பாரி எழுத்தாளர் சு. வெங்கடேசனும், கோவையில் பி.ஆர். நடராஜனும் நிறுத்தப்பட வாய்ப்பு  உள்ளதாக உறுதியாகக் கூறப்படுகிறது.எழுத்தாளர் சு. வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆவார். மதுரை புறநகர் மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினர். 2011-ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டவர். சாகித்ய அகாடமி விருதுபெற்ற காவல் கோட்டம்  நாவல் மற்றும் புகழ்பெற்ற வேள்பாரி போன்ற நூல்களை எழுதியவர். அதேபோன்று, கோவை தொகுதியில் போட்டியிடும் பி.ஆர். நடராஜன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2009 – ல் நடந்த மக்களவைத் தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர்.  கோவையைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு அங்கு செல்வாக்கு உண்டு. அதன் காரணமாக மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சி தேர்வுசெய்துள்ளதாக அந்தத் தகவல் கூறுகிறது .    

Leave A Reply

Your email address will not be published.