ஐ.சி.சி நடுவர் எலைட் குழுவில் இந்தியாவின் ஜி.எஸ் லக்ஷ்மி… ஆண்கள் போட்டியிலும் பணியாற்றலாம்

0 2

ஐ.சி.சி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லக்ஷ்மி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனிமேல், ஆண்கள் கிரிக்கெட்டிலும் ஜி.எஸ்.லக்ஷ்மி நடுவராகப் பணியாற்றலாம். ஐ.சி.சி சர்வதேச நடுவர்கள் குழுவிலும் இவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் இடம் பெற்ற முதல் பெண் நடுவர் இவர்தான். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, கிளாரி போலாஸ்க் முதல் தர ஆண்கள் கிரிக்கெட் போட்டியில்  நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்கிற பெயரை பெற்றார். ராஜமுந்திரியைச் சேர்ந்த 51 வயதான லக்ஷ்மி  2008-09 ஆண்டில் உள்நாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் நடுவராகப் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து, வெளிநாடுகளிலும் பெண்கள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் டி/20 போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றார். ஐ.சி.சி நடுவரானது குறித்து லக்ஷ்மி கூறுகையில், ”ஐ.சி.சி எலைட் நடுவர் குழுவுக்கு என்னைத் தேர்வு செய்ததைக் கௌரவமாகக் கருதுகிறேன். பல ஆண்டுகளாக வீராங்கனையாக, நடுவராக கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பில் உள்ளேன். என் அனுபவத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வேன். ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ என் குடும்பத்தார், என் மீது அக்கறை கொண்டவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.சி.சி-யின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன்” என்றார். ஐ.சி.சி நடுவர்கள் குழு மேலாளர் ஆட்ரியன் கிரிஃபித் கூறுகையில், ”நடுவர்கள் குழுவுக்கு வரும் லக்ஷ்மியை வரவேற்கிறேன். பெண் நடுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் லக்ஷ்மியின் வருகை அமையும். வருங்காலத்தில் ஏராளமான பெண் நடுவர்கள் உருவாக இவர் காரணமாக இருப்பார். கடுமையான நேர்மையான விதிமுறைகளின் பின்பற்றி பெண் நடுவர்கள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றார். 

Leave A Reply

Your email address will not be published.