செட்டிபுண்ணியம், கூத்தனூர், பிள்ளையார்பட்டி கோயில்களில் மாணவர்களுக்காக சக்தி விகடனின் சிறப்பு பூஜை!

0 11

பொதுத் தேர்வுகள் நெருங்கும் தருணம். தேர்வு பற்றிய பதற்றம் இல்லாமல், மனம் ஒன்றிப் படிக்கவும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, விரும்பிய மேற்படிப்பில் சேரவும் இறைவனின் பரிபூரண அருள் தேவை அல்லவா?
இதன் பொருட்டு, 10, +1, +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 25.2.18 அன்று, செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோகஹயக்ரீவர், கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி, பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயில்களில் சக்தி விகடன் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது பற்றிய அறிவிப்பு சக்தி விகடன் இதழிலும் விகடன் இணைய பக்கத்திலும், வெளிவந்ததுமே ஏராளமான வாசகர்கள் தொலைபேசி மூலமாகவும், ஆன்லைனிலும் தங்கள் பிள்ளைகளின் பெயர், நட்சத்திரம் ஆகியவற்றைப் பதிவு செய்துகொண்டனர். பதிவு செய்துகொண்ட மாணவர்களின் பெயர், நட்சத்திரம் உள்ளிட்ட விவரங்கள் மேற்கண்ட மூன்று கோயில்களிலும் சங்கல்பம் செய்துகொள்ளப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியத்தில் அருள்மிகு யோக ஹயக்ரீவர் கோயில் அமைந்திருக்கிறது. சுவாமி தேசிகனுக்கு ஹயக்ரீவர் பிரத்யட்சமாகி, சகல கலைகளிலும் மேன்மையடையச் செய்தார் என்பது தல வரலாறு. வரதராஜ பெருமாள் மூலவராகவும், யோக ஹயக்ரீவர் உற்சவராகவும் எழுந்தருளியிருக்கும் இந்தத் தலத்தில், யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியில் நல்ல முறையில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதீகம். இங்கே நேற்று (25.2.18) காலை 8 மணியளவில் சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தோம். விடுமுறை தினம் என்பதால், தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்த பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது ஹயக்ரீவர் சந்நிதி. சுவாமிக்கு ஏலக்காய் மாலை, துளசி மாலை சாத்தி, மாணவர்களின் பெயர், நட்சத்திரம் சங்கல்பம் செய்துகொள்ளப்பட்டதுடன், சுவாமியின் திருவடிகளில் வைத்து அர்ச்சனை செய்ததுடன், ஹயக்ரீவ வழிபாட்டு ஸ்தோத்திரங்களுடன் விசேஷ ஆராதனையும் நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் மிகச் சிலிர்ப்புடன் மகா ஆராதனையைத் தரிசித்து மகிழ்ந்தனர்.

இதேபோல், திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்திருக்கும் மகா சரஸ்வதி கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்ற அன்று காலையி லிருந்தே திரளான பக்தர்கள் கூடிவிட்டனர். ஆலய அர்ச்சகர் சந்தோஷ் குருக்கள் குறிப்பிட்டுக் கொடுத்த நல்ல நேரத்தில், மாணவர்களின் பெயர்ப் பட்டியலையும் அர்ச்சனைப் பொருள்களையும் சமர்ப்பித்தோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சங்கல்பம் செய்த சந்தோஷ் குருக்கள், மாணவர்களின் பெயர், நட்சத்திரம் அடங்கிய பட்டியலை, சரஸ்வதி அம்பாளின் திருவடிகளில் வைத்து, சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனை செய்து பிரார்த்தித்தார். நாமும் அவருடன் சேர்ந்து பிரார்த்தித்துக் கொண்டோம். சிறப்பு பூஜை நடைபெற, அறநிலையத் துறை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், மற்றும் ஆலய ஊழியர் பாலு உதவி செய்தனர்.

ஞானத்தின் திருவடிவம் அல்லவா விநாயகர். முழுமுதற்தெய்வமான அந்த ஆனைமுகக் கடவுளின் பரிபூரணத் திருவருளும் தேர்வு எழுதப் போகும் பிள்ளைகளுக்குக் கைகூட வேண்டும் எனும் நோக்குடன் பிள்ளையார்பட்டி ஆலயத்திலும் சக்தி விகடன் சார்பில் சிறப்பு பிரார்த் தனை மிக அற்புதமாக நடைபெற்றது.

பதிவு செய்திருந்த மாணவர் ஓவொருவரது பெயருக்கும் சங்கல்பம் செய்யப்பட்டு, விநாயகருக்கு அதிஅற்புதமாக நடந்தேறியது விசேஷ பிரார்த்தனை. பூஜை நடைபெற்ற அன்று சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் திரளாக வந்து பூஜையில் கலந்துகொண்டனர். கோயில் டிரஸ்டிகள் அருணாசலம் செட்டியார், சிதம்பரம் செட்டியார் ஆகியோரும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மனப்பூர்வமான பிரார்த்தனைக்கு சக்தியும் சாந்நித்தியமும் மிக அதிகம் உண்டு. இதோ, கல்விஞானம் அருளும் அற்புதமான திருத் தலங்களில் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும், பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவச் செல்வங்களுக்கு அருள் வழங்கட்டும்; மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் வெற்றிபெற, பரிமுகனும், கணபதியும், கலைமகளும் அருள்வாரி வழங்கட்டும்.!

Leave A Reply

Your email address will not be published.