நவம்பரில் விற்பனைக்கு வரும் கேடிஎம் 390 அட்வென்சர்

0 29

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பெர்பார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கேடிஎம் நிறுவன பைக்குகளுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, இளைஞர்கள்தான் அதிகம். இந்த சூழலில் கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்சர் (KTM 390 Adventure) மோட்டார் சைக்கிள் மாடல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்வென்சர் பைக் ஆர்வலர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக் இந்திய மார்க்கெட்டில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பைக், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. கேடிஎம் நிறுவனத்தின் டியூக் 790 பைக் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வருகிறது. எனவே 390 அட்வென்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளை கேடிஎம் வேகப்படுத்தியுள்ளது. மிலன் நகரில் நடப்பாண்டு நடைபெறவுள்ள எக்மா கண்காட்சியில், கேடிஎம் நிறுவனம் இறுதி புரொடெக்ஸன் வெர்ஷனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 எக்மா கண்காட்சி வரும் நவம்பர் 5ம் தேதி தொடங்கி 10ம் தேதி நிறைவடைகிறது. உலக அளவிலான அறிமுகத்திற்கு பிறகு இந்த பைக் உடனடியாக இந்தியாவிலும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.டியூக் 390 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 373.2 சிசி இன்ஜின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட உள்ளது. டியூக் 390 பைக்கில் இந்த இன்ஜின் 44 எச்பி பவர் மற்றும் 37 என்எம் டார்க் திறனை உருவாக்குகிறது. ஆனால், 390 அட்வென்சர் பைக் வித்தியாசமான டியூனிங் உடன் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 390 அட்வென்சர் பைக்கில், 19 இன்ச் முன்சக்கரமும், 17 இன்ச் பின்சக்கரமும் பொருத்தப்பட்டிருந்தது. கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்சர் பைக்கை, 2.8 லட்சம் முதல் 3 லட்சம் வரை என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.