டெல்லியில் மர்ம நபர்கள் அட்டகாசம் பெண் பத்திரிகையாளர் மீது நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு: காரில் துரத்தி துரத்தி சுட்டனர்

0 17

புதுடெல்லி: காரில் சென்ற பெண் பத்திரிகையாளர் மீது  முகமூடி அணிந்து வந்த 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.நொய்டாவில் உள்ள தனியார் செய்தி சேனலில் பெண் பத்திரிகையாளர் மித்தாலி சந்தேலா பணிபுரிந்து வருகிறார். திருமணமான அவர் தற்போது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.  சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு (நேற்று  அதிகாலை) சொகுசு காரில் அவர் டெல்லிக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, அவரது காரை மற்றொரு கார் துரத்தியது. கிழக்கு டெல்லி நியூ அசோக் நகர் அருகே மித்தாலியின் காரை அது முந்த முயன்றது. எனினும், காரை மித்தாலி நிறுத்தவில்லை. அப்போது, அந்த காரில் இருந்த முகமூடி அணிந்த 2 பேர், மித்தாலி கார் மீது முட்டைகளை வீசினர். பின்னர், காரை வழி மறித்தனர். அதில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த 2 பேரும், மித்தாலி காரின் முகப்பு கண்ணாடி மீது துப்பாக்கியால்  சரமாரி சுட்டுவிட்டு தப்பித்தனர். கண்ணாடியை துளைத்துக் கொண்டு மித்தாலி மீது தோட்டா பாய்ந்தது. வலியால் துடித்த அவர், அந்த வழியே சென்றவர்கள் உதவியுடன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து,  மித்தாலியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.முன் விரோதம், குடும்ப தகராறு, கணவருடன் மோதல் உள்பட அனைத்து கோணங்களிலும் இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.