மொபைல் போனில் வேகமான இணையதள சேவை..: ஜியோவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ள ஏர்டெல் நிறுவனம்!

0 9

புதுடெல்லி: மொபைல் போனில் வேகமான இணையதள சேவை வழங்குவதில் ஜியோவை, ஏர்டெல் நிறுவனம் பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் போன் இணைய சேவையின் வேகம் குறைவாக இருந்ததாக பிராட்பேண்ட் அளவீட்டிற்கான ஓக்லா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜியோவை பின்னுக்குத் தள்ளி பார்தி ஏர்டெல் முன்னணியில் இருப்பதாக கூறியுள்ள ஓக்லா, வோடஃபோன் நிறுவனம் எவ்வித ஏற்றமும் இறக்கமும் இன்றி சீரான வேகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஐடியா நிறுவனத்தின் வேகம் ஒவ்வொரு மாதத்திற்கும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் டவுன்லோடு செய்யப்படும் வேகத்தை வைத்து அளவிட்டுள்ளதாக கூறியுள்ள ஓக்லா, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பாண்டு ஜூலை மாதம் வரை ஏர்டெல் நிறுவனமே வேகமான சேவையை வழங்கியிருப்பதாக கூறியுள்ளது. பிராட்பேண்ட் அளவீட்டை பொருத்தமட்டில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் அதன் பின்னரே ஜீயோ இருப்பதாகவும் ஓக்லா வரிசைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் சராசரி மொபைல் போன்களில் டவுன்லோடு செய்யப்படும் வேகம், 2019 மே மாதத்திற்குப் பிறகு குறைந்துவிட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கை தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டாளர் டிராய் வெளியிட்ட தரவுகளுக்கு முரணானதாக உள்ளது. இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகளின்படி, ரிலையன்ஸ் ஜியோ மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் ஆண்டு முழுவதும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.