அதிக உறுதி, இலகு எடை கொண்ட புதிய மாருதி எர்டிகா

0 28

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய மாருதி எர்டிகா, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய மாருதி எர்டிகா, மாருதி சுஸுகி நிறுவனத்தின் சாதாரண அரேனா  ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் LXi, VXi, ZXi, ZXi+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல்  ஆட்டோமேட்டிக் மாடல் VXi AT மற்றும் ZXi ATஆகிய 2 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். டீசல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் LDi, VDi, ZDi, ZDi+ ஆகிய நான்கு  வேரியண்ட்டுகளில் கிடைக்கும். புதிய மாருதி ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் உருவாக்கப்பட்ட சுஸுகி நிறுவனத்தின் ஹார்ட்டெக் பிளாட்பார்மில்தான் இப்புதிய மாருதி எர்டிகா காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதிக  உறுதியும், இலகு எடையும் கொண்ட உலோக கட்டுமானத்தின் மூலமாக, பழைய மாடலைவிட 10 முதல் 20 கிலோ வரை வேரியண்ட்டுக்கு ஏற்ப எடை குறைந்துள்ளது. ஆனால், பரிமாணத்தில்  அதிகரித்துள்ளது. இந்த கார், 4,395 மிமீ நீளமும், 1,735 மிமீ அகலமும், 1,690 மிமீ உயரமும் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், வீல் பேஸ் பழைய மாடலைப்போலவே 2,740  மி.மீட்டராகவே உள்ளது. புதிய மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 5 மி.மீ குறைக்கப்பட்டு, 180 மி.மீ ஆக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த 7 சீட்டர் காரின் இடவசதி மேம்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடலில் 209 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி உள்ளது. வடிவமைப்பில்  முற்றிலும் புதிய மாடலாக மாறி இருக்கிறது. இப்புதிய மாருதி எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103  பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் இன்ஜின் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. டீசலில் ஆட்டோமேட்டிக் மாடல் இல்லை.மெட்டாலிக்  மேக்மா கிரே, பியர்ல் மெட்டாலிக் ஆக்ஸ்போர்டு, பியர்ல் ஆர்டிக் ஒயிட், மெட்டாலிக் சில்க்கி சில்வர் மற்றும் பியர்ல் மெட்டாலிக் ஆபர் ஆகிய 5 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்புதிய  மாருதி எர்டிகா காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ₹7.44 லட்சம் முதல் ₹9.50 லட்சம் வரையிலான விலையிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகள் ₹9.18 லட்சம்  முதல் ₹9.95 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும். டீசல் மாடல் ₹8.84 லட்சம் முதல் ₹10.90 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.