ஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்

0 20

ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், டாடா ஹாரியர் வருகை, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டில் நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த  நெருக்கடியை போக்கிக்கொள்ளும் விதமாக ஜீப் காம்பஸ் காரின் புதிய வேரியண்ட்டை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் பெட்ரோல் மாடலில் லான்ஜிடியூட் ஆப்ஷனல் என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்  இப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.18.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடுத்தர விலை கொண்ட வேரியண்ட்டில் 7 அங்குல  தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், புரொஜெக்டர் ஹாலஜன் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், 17 அங்குல அலாய் வீல் ஆகிய முக்கிய அம்சங்கள்  உள்ளன. முன்னதாக, இந்த லான்ஜிடியூட் ஆப்ஷன் வேரியண்ட்டானது டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வந்தது. தற்போது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும். இந்த மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை லிமிடேட், லிமிட்டேட்  ஆப்ஷனல் மற்றும் லிமிடேட் ப்ளஸ் உள்ளிட்ட உயர் வகை வேரியண்ட்டுகளில் மட்டுமே பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடுத்தர வகை லான்ஜிடியூட் ஆப்ஷனல் வேரியண்ட்டிலும்  இப்போது வந்திருக்கிறது. விலை உயர்ந்த பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களைவிட ரூ.1 லட்சம் வரை விலை குறைவு என்பதால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும். தற்போது ஜீப் காம்பஸ்  எஸ்யூவி ரக கார், ரூ.15.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட் ரூ.22.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. விரைவில் வர இருக்கும் டாடா ஹாரியர் நேரடி போட்டியாக இருக்கும்.  அத்துடன் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுக்கும் இது போட்டியாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.