‘கழுதை’யைக் கண்டுகொண்ட லிங்கன்! – நினைவுதினச் சிறப்புப் பகிர்வு

0 19

ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு…15 படங்களில்!

“உங்களை மற்றவர்கள் மதிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படாதீர்கள்; அவர்கள் உங்களை மதிக்கும் அளவு உயர்ந்துகாட்டுங்கள்”என்றவர், மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அதுபோலவே அவரை, இளம்வயதில் மதிக்காமல் சிலர் இருந்தபோதும், பின்னாளில் பலரும் மதிக்குமளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டவர். அவருடைய நினைவுதினம் இன்று.

தோல்விகள் எப்போதும் அவரைத் துரத்திக்கொண்டிருந்தபோதும், அதற்காக ஒருநாளும் அவர் கவலைப்பட்டதில்லை. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்; ஒருநாள் நமக்கான வாய்ப்பு வரும் என்று தன் கடமையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தவர்.

“நிதானமாகத்தான் பேச முடியும்!”

எப்போதும் தன்னுடைய பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்த அவர், “சிறுகத்தியாக இருந்தால் அது வேகமாகத்தான் அறுக்கும். பெரிய கத்தி அவ்விதமல்ல; அஃது ஆழமாகப் பாயும். அதுபோலத்தான் என் பேச்சும். என்னால் மற்றவர்களைப் போன்று வேகம் வேகமாகப் பேச இயலாது. நிதானமாகத்தான் பேச முடியும். ஆனால், அதில் சட்ட நுணுக்கங்கள் மிகத் தெளிவாக இருக்கும்” என்பார். மேலும், அவர் வழக்கறிஞராய் இருந்த சமயத்தில், “வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றால் வீண்செலவு ஆகும். ஆகவே, அங்கு போகாமலேயே பார்த்துக்கொள்ள முடியுமா” என்றுதான் யோசிப்பார். அதன்படியே வழக்குகளையும் முடித்துவைப்பார்.

“அன்பாக இருக்க முடியும்!”

இதுபோன்று எத்தனையோ வழக்குகளை முடித்துவைத்த அவரிடம், ஒருநாள் செல்வந்தர் ஒருவர் வந்து, “என்னிடம் ஒரு வழக்கறிஞர் பத்து டாலர் கடன் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை அவர் திருப்பித் தராத காரணத்தால் அவர்மீது வழக்குத் தொடரவேண்டும்” என்று லிங்கனிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு லிங்கன், “உங்களுக்குக் கிடைக்க வேண்டிய டாலரைவிட அதிகமாகச் செல்வாகுமே” என்றார். “அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்மேல் வழக்குப் போட்டே ஆக வேண்டும்” என்றார் செல்வந்தர். உடனே லிங்கன், “அப்படியானால், எனக்குக் கட்டணமாக இருபது டாலர் தரவேண்டியது இருக்குமே” என்றார். அதற்குச் செல்வந்தர் உடன்பட்டு, இருபது டாலரைக் கொடுத்துவிட்டார். டாலரை வாங்கிய லிங்கன், அந்தச் செல்வந்தரிடம் கடன் வாங்கிய வழக்கறிஞரை அழைத்து… தன்னிடமிருந்த இருபது டாலரில், பத்து டாலரைக் கொடுத்து அதை அந்தச் செல்வந்தரிடம் கொடுக்கச் சொன்னார். மீதியிருந்த பத்து டாலரையும் செல்வந்தரிடமே திருப்பிக்கொடுத்து, “இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் நீதிமன்றத்துக்கு வரவேண்டாம். மனிதநேயத்துடன் நடந்துகொண்டால் எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும்”என்று புத்திமதி சொல்லி அனுப்பிவைத்தார்.

‘கழுதை’யைக் கண்டுகொண்ட லிங்கன்!

ஒருமுறை ஆபிரகாம் லிங்கனைக் காண ஒருவர் சொல்லிக்கொள்ளாமல் வந்திருந்தார். அந்த நேரம் பார்த்து லிங்கன் அவசர வேலையாக வெளியில் சென்றுவிட்டார். கொஞ்சம் நேரம் காத்திருந்த அந்த நபர், வெறுத்துப்போய்… லிங்கன் வீட்டு வாசலில் ‘கழுதை’ என்று எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் வீடு திரும்பிய லிங்கன், வந்தவர் யார் என்பதை அங்கு எழுதப்பட்டிருந்த வாசகத்தைவைத்தே கண்டுகொண்டார். பின்னர், மறுநாள் அந்த நபரை லிங்கன் சந்தித்து, “நேற்று நீங்கள் என் வீட்டுக்கு வந்திருந்தீர்கள் போலிருக்கிறது. உங்கள் பெயரை எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறீர்கள். அதனால் யார் வந்தது என்பதை அறிய மிகவும் வசதியாக இருந்தது” என்று சொல்ல… அவமானத்துக்கு ஆளானார் அந்த நபர்.

பெண்ணுக்கு உதவி செய்த லிங்கன்!

“எந்தச் சூழ்நிலையையும் நாம்தான் நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்” என்பார், ஆபிரகாம் லிங்கன். அதுபோலத்தான் அவர் கடைசிவரை இருந்து வாழ்ந்து மறைந்தார். அவர், வழக்கறிஞராய் இருந்த சமயத்தில்… ரயில் நிலையம் செல்லும் வீதிவழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் மிகவும் படபடப்புடன் காணப்பட்டார். அவருக்கருகில் ஒரு பெட்டி இருந்தது. அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்ட லிங்கன், அவரிடம் சென்று, “என்னம்மா ஆயிற்று? யாரையோ எதிர்பார்ப்பதைப்போலக் காணப்படுகிறீர்களே, என்னாயிற்றுச் சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “ரயிலுக்கு அவசரமாகப் போக வேண்டும்; இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்த நபரைக் காணவில்லை. அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார், சற்றே கவலையுடன். அதற்கு லிங்கன், “இவ்வளவுதானே… இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்? நானும் ரயில் நிலையத்துக்குத்தான் வருகிறேன். புறப்படுங்கள்… நான் கொண்டுவருகிறேன்” என்று சொல்லி அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தார். அவர்கள் இருவரும் செல்லவும், ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. ரயிலைப் பிடித்த சந்தோஷத்தில் லிங்கனுக்கு நன்றி தெரிவித்தார் அந்தப் பெண். இப்படி, பெரிய பொறுப்பிலும், பதவியிலும் அவர் இருந்தபோதுகூட யாராவது உதவி என்று கேட்டுவிட்டால் போதும். அதையெல்லாம் மறந்துவிட்டு அவர்களுக்கு உதவிசெய்ய ஆரம்பித்துவிடுவார்.

“உங்களுக்குப் பகைவரை ஒழிக்கும் எண்ணம் ஏற்படாதா?”

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்ற காலம். இருதரப்பிலும் ஏராளமானோர் இறக்க நேரிட்டது. எவ்விதமும் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார், லிங்கன். காயம்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லச் சென்றார் லிங்கன். அங்கிருந்த தலைமை மருத்துவர், “இங்கிருப்பவர்கள் எல்லாம் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால், நீங்கள் அங்கு போக வேண்டாம்” என்றார். அதற்கு லிங்கன், “அதனால் என்ன? அவர்களும் இந்தப் போரில் காயம்பட்டவர்கள்தானே? நான் இரண்டு பிரிவினருக்கும்தானே ஜனாதிபதி. ஆகவே, அவர்களையும் பார்த்துவிட்டு வருவோம்” என்று சொல்லி, அவர்களுக்கும்போய் ஆறுதல் கூறினார்.

இப்படியான உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்த லிங்கனிடம்… பெண்ணொருவர், “உங்களுக்குப் பகைவரை ஒழிக்கும் எண்ணம் ஏற்படாதா” என்று கேட்டார். அதற்கு லிங்கன், “அவர்களும் என் நண்பர்கள்தானே? அவர்களையும் நண்பர்களாகக் கருதுவதன் மூலம் நான் எதையும் இழக்கப்போவதில்லை. மேலும், அவர்களை நண்பர்களாகக் கருதுவதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் தங்கள் பகை உணர்ச்சியையும் அழித்துவிடுவார்கள் என்றும் நம்புகிறேன்” என்றார் சிரித்தபடி.
இப்படிப் பகைவர்களையும் நண்பர்களாக மதித்துவந்த லிங்கன், பார் போற்றும்வண்ணம் புகழப்பட்டார். ஆனால், கடைசிவரை பகை உணர்ச்சியை மாற்றிக்கொள்ளாமல் இருந்த ஒருவன், அவரையே சுட்டுக்கொன்றான்.

Leave A Reply

Your email address will not be published.