140 குழந்தைகள்… 200 ஒட்டகங்கள்! – 550 ஆண்டுக்கு முன் நடந்த நரபலி #ShockingReport

0 14

பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள கடலோர பிரதேசத்தில், 550 ஆண்டுகளுக்கு முன், ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான பெரு-வின் வடபகுதியில், ட்ருஜிலோ என்னும் நகரம் அமைந்துள்ளது. அங்கு, லாஸ் லாமாஸ் என்னும் இடத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ட்ருஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச குழு ஒன்று, நேஷனல் ஜியோகிரஃபிக் சொசைட்டி உதவியுடன் இந்தத் தொல்பொருள் ஆய்வை 2011-ம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், முதன்முதலில் கடந்த வியாழனன்று (26-04-2018) நேஷனல் ஜியோகிரஃபிக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

லாஸ் லாமாஸில் கிடைத்த எலும்புகள், மண்டை ஓடு உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து கார்பன் பரிசோதனை செய்ததில், சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு, (கி.பி 1450-ம் ஆண்டு காலகட்டத்தில்) ஒரு மாபெரும் நரபலி நிகழ்வு நடந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 5-14 வயது மதிக்கத்தக்க 140 குழந்தைகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனுடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 140 குழந்தைகளுடன் 200 ஒட்டகங்களும் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள்.

இப்பகுதியில், இதுபோன்ற அதிர்ச்சி உண்மைகள் வெளிவருவது புதிதல்ல. கடந்த 2011-ம் ஆண்டு, இதே இடத்தில் 3,500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் நடத்திய தொல்பொருள் ஆய்வில், 40 மனிதர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நரபலி கி.பி 1450ல் வாழ்ந்த, தென் அமெரிக்க பழங்குடியினரால் நிகழ்த்தப்பட்டவை. ‘இதை நான் எதிர்பார்க்கவில்லை. இதுபற்றிய விரிவான அறிக்கை விரவில் சமர்ப்பிக்கப்படும்’ என்று வெரானோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெரு நாட்டில் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Source – National Geographic

Leave A Reply

Your email address will not be published.