”எங்கடை சனத்தைச் சாகவிட்டிட்டு என்னாலை வரேலாது!” ஈழப் போரின் இறுதி வரை போராடிய நளா – ஜெயம்!

0 12

ஈழத் தமிழர்களுக்குச் சற்று அமைதி அளிப்பதாகத்தான் இந்த நூற்றாண்டு தொடங்கியது. ஆனால், அதன் முதல் பத்தாண்டு நிறைவு செய்வதற்குள், மீண்டும் கொடூரக் காலத்தைக் காட்டிவிட்டது. போர் ஓய்வுக் காலம் தன் ஆயுளை 2006-ம் ஆண்டிலிருந்து மெல்ல இழந்துவந்த நிலையில், 2008-ம் ஆண்டிலிருந்து இலங்கை அரசின் வலுவான தாக்குதலை எதிர்கொள்ளவேண்டிய சூழலுக்கு ஈழத் தமிழர்கள் தள்ளப்பட்டனர். தமிழர்கள் தம் அரசியல் உரிமைக்காகப் போராடியதுபோய், உயிரைக் காத்துக்கொள்ளவேண்டிய அவலநிலை வந்தது. ஆயினும், களத்தில் நின்ற போராளிகள் எச்சூழலிலும் பின்வாங்காது மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் ஆண், பெண் பேதமில்லாமல் ஈழப்போரின் முழு வீச்சோடு எதிர்த்து களமாடினர். விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான ஜெயமும் அவரின் மனைவி நளாவும் 2009 மே மாதத்தின் இறுதித் தாக்குதல் வரை மக்களைக் காப்பதற்குப் போரிட்டனர். நளாவின் தோழியும் எழுத்தாளருமான தமிழ்நதியின் நெகிழ்ச்சியான பகிர்வு…

“உங்களுக்குப் பயமாயில்லையா நளா?”

“முன்னிரவு. கொட்டிலுக்குள் கட்டப்பட்டிருந்த ஆடுகளின் கழுத்துமணி அசைவு தவிர்த்து வேறெந்த ஓசைகளுமில்லை. வீட்டுக்கு முன்னால் போடப்பட்டிருந்த விசாலமான மாலுக்குள் அமர்ந்திருந்தோம். அம்மா நேரத்துக்கே உறங்கச் சென்றுவிட்டார்.”

“ஏனக்கா?” நளா சிரித்தபடி கேட்டார்.

“நீங்கள் ரெண்டு பேரும் போராளியள். எந்த நேரம் என்ன நடக்குமெண்டது தெரியாது. நாளைக்கு உங்களுக்கு ஒண்டு நடந்தால், இந்தப் பிள்ளைகள்..?”

நளாவின் விரல்கள், மடியில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் தலைமுடியை அளைந்தன.

“எங்களுக்கு மட்டுமா? போராட்டத்துக்குள்ளை இருக்கிற எல்லாருக்கும் நடக்கிறதுதானே?”

கணப்பொழுதும் தயங்காமல் உறுதியோடும் தெளிவோடும் அவர் அந்தப் பதிலைச் சொன்னார். மக்களுக்காகவே வாழ்வும் சாவும் என வரித்துக்கொண்ட லட்சியத்தின் மீதான பெருமிதம் அந்த விழிகளில் சுடர்ந்தது. அக்கணம் அவர் முன்னெப்போதையும்விட அழகாகத் தோன்றினார். சுயநல வாழ்வினைத் தேர்ந்த என்னை அந்தப் பதில் சுட்டது. அந்த நல்லிதயத்தின், தன்னலமின்மையின் முன்பு மானசீகமாகத் தலைகவிழ்ந்து நின்றேன்.

(இடமிருந்து வலமாக… நளா, ஜெயம் மற்றும் ஓவியர் புகழேந்தி)

நளாவை, தளபதி ஜெயம் அவர்களின் மனைவியாகத்தான் முதலில் அறிமுகம். ஜெயம், என் கணவரின் நண்பர். இருவரும் ஒரே ஊரை, பாவற்குளத்தைச் சேர்ந்தவர்கள். 1985-ம் ஆண்டிலிருந்து ஜெயம் எனக்கும் பரிட்சயமானார். திருநெல்வேலி பல்கலைக்கழகத்துக்குப் பின்புறமிருந்த ஒழுங்கையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு என் கணவரோடு (அப்போது காதலர்) வருவார். ஜெயம், சராசரியை மிஞ்சிய உயரம். குறைந்தபட்சம் ஆறேகால் அடி உயரம் இருப்பார். கூச்ச சுபாவமுள்ளவர். அதிகம் கதைக்க மாட்டார். அப்படியே கதைத்தாலும், வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கதைப்பதுபோல இடைவெளிகள் விடுவார். இடையில் சில காலம் அவரோடு தொடர்பில்லை. பிறகு, அவருக்குத் திருமணமாகிவிட்டதாக அறிந்தேன். பல ஆண்டுகள் கழித்து, வட்டக்கச்சியில் அவர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டில், முதன்முதலில் நளாவைச் சந்தித்தேன். நல்ல உயரம், மெலிந்த உடல்வாகு, தெளிந்த நீள விழிகள், கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு. அப்போதுதான் முதற்சந்திப்பு எனத் தோன்றாத வகையில் கலகலப்பாக உரையாடினார். இரவு உறக்கத்துக்கு முன்னதான உரையாடலின்போது, தானும் இயக்கத்தில் ஒரு பயிற்சியாளர் எனவும், தற்போது விடுமுறையில் நிற்பதாகவும் கூறினார். இயக்கத்தில் போராளிகளுக்கிடையில் திருமண உறவுகள் நிகழ்வது வழமை. நளா, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். காலம் எனது ஞாபகத்தைச் சரித்துவிடவில்லையெனில், சசிகுமார் மாஸ்டர்தான் அந்தச் ‘சம்பந்த’த்துக்குக் காரணம் என்று நளா கூறியதாக நினைவு.

தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையில் தங்களது திருமணம் நடைபெற்றதாகக் கூறி புகைப்படங்களைக் காட்டினார். அந்தப் போராளியின் முகம்தான் அப்போது எத்தகு ஒளிகொண்டு பொலிந்தது!

ஜெயம் அண்ணாவையும் நளாவையும் பொறுத்தமட்டில், போராட்டம் வேறு குடும்பம் வேறில்லை. மக்களோடு மக்களுக்காகக் களத்தில் நின்றவர்கள் அவர்கள். அதுவொரு உன்னதமான வாழ்வியல் முறை. நளா மட்டுமல்லாது, அம்புலி என்ற கவிஞரும் வேறு பலரும் குடும்ப வாழ்வில் இருந்தபடி களத்தில் நின்றவர்கள்தாம்.

அதன்பிறகான கிளிநொச்சி நோக்கிய பயணங்கள் நளாவைக் காண்பதற்கென்றே தொடர்ந்தன.

பெண்ணொன்றும் ஆணொன்றுமாக இரண்டு பிள்ளைகள். அழகான, அளவான, அன்பான குடும்பம் அது. பிறகு, அவர்கள் வட்டக்கச்சியிலிருந்து கிளிநொச்சி நகரத்துக்குச் சற்றுதள்ளி இடம் மாறிப்போனார்கள். இரண்டு சிறிய அறைகள்கொண்ட வீடு. வீட்டின் தடுப்புச் சுவர்கள், எறிகணைகள் நிரப்பிவரும் தகரப்பெட்டிகளைப் பிரித்துத் தட்டி எழுப்பப்பட்டவை. வெக்கைதான்… இடப்புறம், ஆள்களைச் சந்திப்பதற்காக தனியான கொட்டகை.

நளா பிள்ளைகள் மீது எத்தனைக்கெத்தனை பாசத்தைப் பொழிவாரோ, அத்தனைக்கத்தனை கண்டிப்பானவர். மிகச்சிறந்த நிர்வாகி என்பது வீட்டைப் பார்த்தாலே தெரியும். பயிற்சிக் களத்தில் மிகுந்த ஆளுமை பொருந்திய பயிற்சியாளர் எனப் பிறர் சொல்லி அறிந்தேன். தனிப்பட்ட முறையில் குழந்தையின் சுபாவம்கொண்டவர்.

எங்கள் அம்மாவுக்கும் அவருக்கும் நன்றாக ஒத்துப்போகும். என்னதான் நட்பேயானாலும், இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர், முதன்நிலையிலுள்ள தளபதி ஒருவரின் மனைவி என்ற மரியாதை என் மனதின் ஓரத்தில் இருக்கும். அம்மாவுக்கு அத்தகைய பிரிகோடுகள் தெரியாது. “ஏன் பிள்ளை மெலிஞ்சு போனாய்? கழுத்தெலும்பு தெரியுது பார்” என்பார். அம்மாவின் பேச்சினிடையேயான பழமொழிகளைக் கேட்டு, நளா விழுந்து விழுந்து சிரிப்பார்.

“அம்மா, சும்மா இருங்கோ” என்று நான் ஆற்றாமல் கண்டித்தால், “அக்கா, அம்மான்ரை கதையளைக் கேட்க எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா?” என்று முகமெங்கும் சிரிப்போடு சொல்வார். நளா, தன் தாயைப் பற்றிக் கதைக்காத நாளே இல்லை எனலாம். அவருடைய தாய், மன்னாரில் இருந்தார். அடிக்கடி சந்திக்கக்கூடிய சூழமைவு இல்லை. தாயைப் பிரிந்திருந்த ஏக்கம்தான் காணும் தாய்மாரில் எல்லாம் அத்தனை அன்பு கனியத் தூண்டியதோ என்னவோ!

நளாவை மீண்டும் சந்தித்தபோது, “திரும்பச் சண்டை தொடங்கும்போலை கிடக்கு. நானும் போகவேண்டியிருக்கும்” என்றார்.

அப்போதுதான் நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். “உங்களுக்குப் பயமாயில்லையா நளா?”

பயமாவது ஒன்றாவது… அதற்கும் நளாவுக்கும் வெகுதூரம்.

2009-ம் ஆண்டு, போர் உக்கிரம் அடைந்து சனங்கள் எல்லோரும் முள்ளிவாய்க்காலை நோக்கி நெருக்கித் தள்ளப்பட்டபோது, நளாவும் பிள்ளைகளும் என்னவானார்களோ என்று நாங்கள் அஞ்சினோம். நான் அப்போது சென்னையில் இருந்தேன். வன்னியோடு தொடர்புகொள்ள முடிந்த ஒருவரை, நளாவுக்கு என்ன நடந்ததென்று அறிந்து சொல்லும்படி வேண்டினேன்.

‘ஜெயம் அண்ணா பிறகு வரட்டும். பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு நீங்கள் மட்டுமாவது வெளியேறப் பாருங்கள்’ என்று தான் கேட்டபோது, ‘எங்கடை சனத்தைச் சாகவிட்டிட்டு என்னாலை வரேலாது’ என்று நளா கூறியதாக, அந்த நண்பர் என்னிடம் சொன்னார். நளா கூறியபடி களத்தில் இறங்கிவிட்டார். கணவன் – மனைவி இருவரும் தாங்கள் நம்பிய லட்சியத்துக்காக இறுதிவரை போராடி தமது இன்னுயிர்களை ஈந்தார்கள்.

தளபதி ஜெயம் அவர்கள், கைப்பிடியில் மண்ணை இறுகப்பற்றி நெஞ்சில் வைத்தபடி. வீரச்சாவடைந்து கிடந்த புகைப்படத்தை, இலங்கை பாதுகாப்புப் படைகளின் இணையத்தளம் வெளியிட்டது. நளாவை புகைப்படமாகவும் நாங்கள் காணவில்லை. அந்தக் கலகல பேச்சும் சிரிப்பும் உறைந்த, சிதைந்த புகைப்படத்தைக் காணும் தைரியமும் எங்களுக்கில்லை.

இருந்திருந்துவிட்டு என் அம்மா கேட்பார்: “நளா மட்டுமெண்டாலும் எங்கையாவது தப்பியொட்டி இருக்கமாட்டாளா?”

அந்தக் கேள்விக்கான பதில் வரும் வாசலை, துயரம் வழிமறித்து நிற்கும். அன்றொரு இரவில் நான் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தபோது, நளாவின் முகத்தில் பொலிந்த பெருமிதமும் ஒளியும் நினைவில் வரும்.

**

நளாவின் கணவர் கேணல் ஜெயம், யுத்தத்தின் இறுதியில், இலங்கை அரசிடம் பிடிபட்டுவிடக்கூடாது எனத் தற்கொலை செய்துகொண்டார். அவர் இறக்கும்போது, தன் நாட்டின் மண்ணையும் புல்லையும் கைகளில் ஏந்தியிருந்தார். உயிர் பிரிந்த பின்பும் அவரின் கைகள் அவற்றை விட்டுவிடவில்லை எனச் செய்தி வெளியானது. ஈழப்போரின் போது நடந்த ஒவ்வொரு செய்தியும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.